இந்தியா

அரசியல் பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வு காண்பது அவசியம்: நேபாள பிரதமரிடம் மோடி

பிடிஐ

நேபாளத்தில் நிலவும் அரசியல் பிரச்சினைக்கு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய தீர்வு காண வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேபாள பிரதமர் கே.பி.ஒளி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு, அந்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசினர்.

அப்போது நேபாளத்தில் நிலவும் அரசியல் பிரச்சினைக்கு ஒருமித்த கருத்தின் அடிப்படையில், நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய தீர்வு காண வேண்டியது அவசியம் என்று அந்நாட்டு பிரதமரிடம் நமது பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மோடி அழைப்பு

இதுகுறித்து நேபாள பிரதமரின் ஊடக பிரிவு ஆலோசகர் பிரமோத் தஹல் கூறும்போது, “பிரதமர் கே.பி.ஒளியும் இந்திய பிரதமர் மோடியும் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, இந்தியாவுக்கு வருமாறு ஒளிக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஒளி, அரசியல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்ட பிறகு வருவதாக உறுதி அளித்தார். மேலும் இந்திய-நேபாள எல்லையில் தடையற்ற வர்த்தகம் நடைபெற உதவுமாறு மோடிக்கு கோரிக்கை வைத்தார். இதற்கு இந்தியா எத்தகைய தடையும் ஏற்படுத்தாது என உறுதி அளித்தார்” என்றார்.

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சீனாவுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள ஒளி திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அதற்கு முன்னதாக இந்தியாவுக்கு முதல் பயணம் செய்வார் என்று தகவல்கள் கூறுகின்றன.

நேபாளத்தில் மன்னராட்சி முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்களாட்சி மலர்ந்தது. இதையடுத்து புதிய அரசியல் சாசனம் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நேபாளத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேசிகள், தாங்கள் புதிய அரசியல் சாசனப்படி இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதாக கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

விகிதாச்சார பிரதிநிதித்துவம், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இடம் அளிக்கும் வகையில் அரசியல் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நேபாள அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர இந்தியா வலியுறுத்தியது. இதை ஏற்க மறுத்ததால், இந்தியாவிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரிகள் இருநாட்டு எல்லையில் நிறுத்தப்பட்டன. இதனால் நேபாளத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், மாதேசிகளின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர நேபாள அமைச்சரவை முன்வந்துள்ளது. இந்நிலையில்தான் இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசி உள்ளனர்.

SCROLL FOR NEXT