மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 3 மடங்கு அதிகமாக வென்டிலேட்டர்கள், பிஎம் கேர்ஸ் நிதி மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவக் கருவிகள், மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள் போன்றவற்றில் பற்றாக்குறை நிலவுகிறது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்குத் தேவை யான வென்டிலேட்டர்கள் பி.எம். கேர்ஸ் நிதி மற்றும் மத்திய சுகாதாரத்துறை மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 60 ஆயிரம் வென்டிலேட்டர்களை பிஎம் கேர்ஸ் நிதி, மத்தியசுகாதாரத்துறை ஆகியவை வழங்கியுள்ளன.
கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு 16 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டன. தற்போது 3 மடங்குக்கும் அதிகமாக வென்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சில மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும், சில மாநிலங்களில் வென்டிலேட்டர்கள் சரியாக செயல்படவில்லை என்றும் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அவை சரி செய்யப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவுக்கு 5,800,உத்தரபிரதேசத்துக்கு 7,000,கர்நாடகாவுக்கு 6,600 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு குறைந்த அளவிலான வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது. - பிடிஐ