இந்தியா

நக்சலைட்டுகளை ஒடுக்க ஒருங்கிணைந்த திட்டம் அவசியம்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

செய்திப்பிரிவு

நக்சலிசம், பிரிவினைவாதம், தீவிர வாதம் போன்ற பிரச்சினைகளை தீர்க்க விரிவான ஒருங்கிணைந்த செயல்திட்டம் அவசியமாகும். அது சம்பந்தமாக தமது அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை கூறினார்.

அமைச்சர் பதவியேற்ற பிறகு, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்முறையாக தமது மக்களவைத் தொகுதியான லக்னோவுக்கு வந்த அவர், கட்சி தொண்டர்களிடையே பேசும்போது கூறியதாவது:

நக்சலிசம், பிரிவினைவாதம் அல்லது தீவிரவாதம் போன்ற பிரச்சினைகளை சவாலாக எடுத்துக் கொண்டுள்ளோம். இவற்றை ஒடுக்க விரிவான ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவைப்படுகிறது. அதற் கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவற்றின் மூலம் சமநோக்கு நடவடிக்கைகளை எடுக்க முயற்சி எடுப்போம்.

இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க முந்தைய காலங்களில் முயற்சி எடுக்கப்படவில்லை. இவற்றை தீர்க்க ஒருங்கிணைந்த திட்டம் இன்னும் தயாராகவில்லை. இப்போதுதான் அதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது, அதன் மூலம் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

‘நண்பனை மாற்றிவிடலாம், ஆனால் அடுத்த வீட்டுக்காரரை மாற்ற முடியாது’ என்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கருத்தின்படி செயல்பட பாஜக திட்டமிட்டுள்ளது.

பாஜகவுக்கு நாட்டு மக்கள் தெளிவான உத்தரவு கொடுத்துள்ளனர். அரசிடம் சில எதிர்பார்ப்புகளும் அவர்களுக்கு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சுறுசுறுப்பும் கற்பனை வளமும் மிக்கவர். அவரது தலைமையிலான அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்.

நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை களைய புதிய அரசு உறுதிபூண்டுள்ளது. நிர்வாக அமைப்பில் உள்ள குறைகளே நாட்டில் ஏற்பட்டுள்ள முடக்க நிலைக்கு காரணம்.அதை ஒன்று அல்லது 2 ஆண்டுகளில் சரிசெய்து விடமுடியாது. அதற்கு அவகாசம் தேவை. நாட்டின் பாதுகாப்பை பொருத்தமட்டில் என்ன செய்யவேண்டுமோ அவற்றை இந்த அரசு செய்யும்.

சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி இந்த நேரத்தில் எந்த மாநிலம் பற்றியும் நான் கருத்து கூறமாட்டேன். அனைத்து மாநிலங்கள் பற்றியும் எனது அமைச்சகத்திடம் அறிக்கைகள் உள்ளன. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

SCROLL FOR NEXT