படம் உதவி: ட்விட்டர். 
இந்தியா

இந்தியாவில் குறையும் கரோனா; 3 லட்சத்துக்கும் குறைவாகத் தொற்று: உயிரிழப்பு 4 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிப்பு

பிடிஐ

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் லாக்டவுன் நடவடிக்கை காரணமாக, கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்துக்கும் குறைவானவர்களே கரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால், 4 ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பு அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 81 ஆயிரத்து 386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 49 லட்சத்து 65 ஆயிரத்து 463 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 27 நாட்களில் தினசரி பாதிப்பில் 2.81 லட்சம்தான் குறைவானதாகும்.

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 35 லட்சத்து 16 ஆயிரத்து 997 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத் தொற்றில் 14.09 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து 2 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 76 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 4 ஆயிரத்து 106 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 74 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 974 பேரும், கர்நாடகாவில் 403 பேரும், தமிழகத்தில் 311 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 308 பேரும் உயிரிழந்தனர். டெல்லியில் 262 பேரும், பஞ்சாப்பில் 202 பேரும், உத்தரகாண்டில் 188 பேரும், ராஜஸ்தானில் 156 பேரும், மேற்கு வங்கத்தில் 147 பேரும், சத்தீஸ்கரில் 144 பேரும், ஹரியாணாவில் 139 பேரும், ஆந்திராவில் 101 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 31 கோடியே 64 லட்சத்து 23 ஆயிரத்து 658 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 15 லட்சத்து 73 ஆயிரத்து 515 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT