இந்தியா

கரோனாவிலிருந்து ஒரே நாளில் 3.62 லட்சம் பேர் குணமடைந்தனர்- 4 முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

செய்திப்பிரிவு

கரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 3.62 லட்சம் பேர் குணமடைந்தனர். இதனிடையே, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு கரோனா நிலவரம் குறித்து ஆலோ சனை நடத்தினார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, நாடு முழுவதும் ஒரே நாளில் 3.11 லட்சம் பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 25 நாட்களில் பதிவான மிகக் குறைந்த தினசரி தொற்றாகும். இந்தியாவில் இதுவரை 2.46 கோடி பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 3.62 லட்சம் பேர் கரோனா தொற்றில் இருந்து குண மடைந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 2.07 கோடி பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மருத்துவமனைகள், வீடுகளில் 36.18 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 4,077 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2.7 லட்சமாக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வடமாநி லங்களில் கரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிராவில் புதிதாக 34,848 பேர், மேற்குவங்கத்தில் 19,511 பேர்,உத்தரபிரதேசத்தில் 12,513 பேர், ஒடிசாவில் 11,805 பேர், ஹரியாணாவில் 9,676 பேர், குஜராத்தில் 9,061 பேர், சத்தீஸ்கரில் 7,664 பேர், மத்தியபிரதேசத்தில் 7,571 பேர், பிஹாரில் 7,336 பேர், பஞ்சாபில் 6,771 பேர், டெல்லியில் 6,430 பேர், உத்தராகண்டில் 5,654 பேர், அசாமில் 5,347 பேர், ஜார்க்கண்டில் 3,157 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தென்மாநிலங்களில் கர்நாடகா, தமிழகம், கேரளாவில் தினசரி தொற்று தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கர்நாடகாவில் 41,664 பேர், தமிழகத்தில் 33,658 பேர், கேரளாவில் 32,680 பேர், ஆந்திராவில் 22,517 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நாட்டில் மிக அதிகபட்சமாக கர்நாடகாவில் 6.05 லட்சம் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிராவில் 4.96 லட்சம் பேர், கேரளாவில் 4.45 லட்சம் பேர், தமிழகத்தில் 2.07 லட்சம் பேர், ஆந்திராவில் 2.07 லட்சம் பேர், சிகிச்சையில் உள்ளனர்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி ஆகிய4 மாநில முதல்வர்களுடன் பிரதமர்நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு கரோனாவைரஸ் தொற்று நிலவரம் குறித்துஆலோசனை நடத்தினார். பிடிஐ

SCROLL FOR NEXT