கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் வழிகாட்டு விதிமுறைகளில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று நகரப்பகுதிகளில் அதிக அளவில் இருக்கும் நிலையில், புறநகர் பகுதிகளிலும் கிராமப்பகுதிகள், பழங்குடியின பகுதிகளிலும் கரோனா தொற்று ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே, கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கிராமப்புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து நிலைகளிலும் ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். கிராமங்களிலும் புறநகர் பகுதிகளிலும் குறைந்தபட்சம் 30 படுக்கைகளைக் கொண்ட கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க திட்டமிட வேண்டும். பொது சுகாதார மையங்களில் கரோனாவைக் கண்டறியும் விரைவு பரிசோதனைக் கருவிகள் வைத்திருக்க வேண்டும்.
கரோனா நோய் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களையும் நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களையும் தனித் தனி பகுதிகளில் பிரித்து வைத்திருக்க வேண்டும். இவர்களை எந்த சூழலிலும் ஒரே இடத்தில் அனுமதிக்கக் கூடாது. எல்லா கிராமங்களிலும் காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 80 முதல் 85 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லாத அல்லது லேசான அறிகுறிகளுடன் பாதிப்புஉள்ளது. இவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்குத் தேவையான பாராசிட்டமல், இருமல் மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். ஆக்சிஜன் அளவை கண்காணிக்கும் ஆக்சிமீட்டர் மற்றும் காய்ச்சலை அறிய உதவும் தெர்மாமீட்டர் போன்றவற்றை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
நோயாளிகளுக்கு நோயின் பாதிப்பு அதிகரித்தால் அவர்களை மேல் சிகிச்சைக்காக பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வகையில் அடிப்படை உயிர்காக்கும் ஆக்சிஜன் கருவிகள் உள்ளிட்டவைகளைக் கொண்ட ஆம்புலன்ஸ், கரோனா சிகிச்சை மையங்களில் இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய சுகாதார மையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் அல்லது மற்ற அடையாளம் காணப்பட்ட தனியார் மருத்துவமனைகள் போன்றவை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட வேண்டும்.
இவ்வாறு வழிகாட்டு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.