நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எம்.பி.க்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்துக்குள் தீவிரவாதிகள் 5 பேர் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவினர். திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த நேரத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் எம்.பி.க்கள் இருந்தனர். அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்குள் இருந்தனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்களும் போலீஸாரும் பதிலடி கொடுத்தனர். அதில் 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 5 டெல்லி போலீஸார், மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த பெண் காவலர், நாடாளுமன்ற காவலர்கள் 2 பேர், தோட்டக்காரர் ஒருவர் என 9 பேர் உயிர்த் தியாகம் செய்தனர்.
சரியான நேரத்தில் இவர்கள் செயல்பட்டிருக்காவிட்டால், நாடாளுமன்ற அவைகளுக்குள் தீவிரவாதிகள் புகுந்து எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கக்கூடும். இந்நிலையில், நாடாளுமன்ற தாக்குதல் நடந்த 14-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் எம்.பி.க்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி, அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா மற்றும் எம்.பி.க்கள் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினரை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
தீவிரவாதத்தை எந்த வகையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கை. இந்திய நாட்டை மிகுந்த பாதுகாப்புடையதாக்குவதுதான் எங்கள் நோக்கம். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாடாளுமன்றத்தின் மாண்பை காப்பாற்றவும், மக்கள் பிரதிநிதிகளை காக்கவும் தங்கள் இன்னுயிரை நீத்த அந்த வீரர்களை இந்த நாடு என்றைக்கும் மறக்காது. அவர்களுடைய துணிச்சல், வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.