பஞ்சாபில் முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதியை பிரிந்து புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபின் லூதியானாவிலிருந்து 50 கி.மீ மற்றும் சங்ரூரிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது மலேர்கோட்லா. சங்ரூர் மாவட்டத்தில் அமைந்த இங்கு முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர்.
இப்பகுதியை தனி மாவட்டமாக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. இதை தன் தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் சேர்த்திருந்தது.
தற்போது இதை நிறைவேற்றும் விதத்தில் சங்ரூர் மாவட்டத்திலிருந்து மலேர்கோட்லாவை தலைமையிடமாகக் கொண்டு அதே பெயரில் புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை காங்கிரஸ் முதல்வரான கேப்டன் அம்ரேந்தர்சிங் இரண்டு தினங்களுக்கு முன் ரம்ஜான் அன்று அறிவித்தார். இத்துடன் அங்கு புதிதாக மருத்துவக் கல்லூரி, மகளிர் கல்லூரி மற்றும் மகளிர் காவல்நிலையம் ஆகியவற்றுக்காக ரூ.500 கோடியும் ஒதுக்கியுள்ளார்.
இதன்மூலம், பஞ்சாபின் 23 ஆவது மாவட்டமாக மலேர்கோட்லா உருவாகி உள்ளது. இதை கண்டித்து உ.பி. முதல்வர் யோகி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து உ.பி. முதல்வர் யோகி தனது பதிவில், ‘‘இந்த புதிய மாவட்டத்திற்கான அறிவிப்பு காங்கிரஸின் பிரித்தாளும் கொள்கையை பிரதிபலிக்கிறது.
மதம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறானது’’ எனத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பதில்
இதற்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர்சிங் பதிலளித்து இட்டுள்ள பதிவில், ‘பஞ்சாப் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது உ.பி.க்கு நல்லது. பாஜக ஆளும் அம்மாநிலத்தில் பிரித்தாலும் அழிவுகரமான கொள்கைகள் அரங்கேறுகின்றன.
இக்கட்சி ஆட்சியில் அமர்ந்தது முதல் கடந்த 4 வருடங்களாக உ.பி.யின் மதக்கலவரங்களை தூண்டி வருகிறது. மலேர்கோட்லாவின் வரலாற்றை பற்றி உ.பி. முதல்வருக்கு என்ன தெரியும்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலேர்கோட்லா வரலாறு
கடந்த 1454 இல் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளரான ஷேக் சத்ரூத்தீநெ-ஜஹானால் மலேர்கோட்லா உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 1657 இல் பயாசித் கான் என்பவரால் தனி மாகாணமாக்க்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு பிரிக்கப்பட்ட போது பஞ்சாப் முழுவதிலும் கலவரம் வெடித்தும் மலேர்கோட்லா அமைதியாக இருந்தது. இதற்கு அங்கு 1705 இல் நிகழ்ந்தவரலாற்று சம்பவம் காரணம் எனக் கருதப்படுகிறது.
அப்போது சீக்கியர்களின் 10 ஆவது குருவான கோவிந்த்சிங்கின் மகன்களான 9 மற்றும் 7 வயதில் சாஹிப்ஜாதா ஜோரோவார்சிங்கும், சாஹிப்ஜாதா பதேசிங்கும் இருந்தனர். இவர்களை கொல்ல மலேர்கோட்லாவின் ஆளுநரான சிரிஹிந்த் வஜீர் கான் உத்தரவிட்டார்.
இது இஸ்லாத்திற்கும், அவர்களது புனிதக் குர்ஆன் கொள்கைக்கும் எதிரானது என மலேர்கோட்லாவின் நவாபான ஷேர் முகம்மது கான் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை அந்த இரண்டு வாரிசுகளான நவாப்ஜாதாக்களை காத்தார்.
இதன் நன்றிக்கடனாக, பிரிவினையின் கலவரத்தில் சீக்கியர்கள் மலேர்கோட்லாவின் முஸ்லிம்களை காத்தமையால் கலவரம் ஏற்படவில்லை என வரலாற்று பதிவில் உள்ளது. அதில், பஞ்சாப் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தான் சென்றும், மலேர்கோட்லாவினரை மட்டும் அங்கு செல்ல சீக்கியர்கள் அனுமதிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.