இந்தியா

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி எச்சில் இலை மீது உருளும் சேவை: கர்நாடக கோயில் நிர்வாகிகளுக்கு மாநில அரசு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடக இந்து கோயில்களில் எச்சில் இலை மீது உருளும் ச‌டங்கு நடத்தப்பட்டது. இதற்கு தலித் அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், சடங்கு நடத்தியது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோயில் நிர்வாகிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

க‌ர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள இந்து கோயில்களில் ‘உருளு சேவை', ‘மடே ஸ்நானம்', ‘இடே ஸ்நானம்' என்ற பெயர்களில் வினோத சடங்கு நடத்தப்படுகிறது. உயர் சமூகத்தி னர் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது பின் தங்கிய சமூகத்தினர் மேலாடைகளை களைந்து விட்டு உருள வேண்டும். இந்த தீண்டாமை கொடுமைக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, போலீஸ் பாதுகாப்புடன் குக்கே சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடந்த 15-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் எச்சில் இலை மீது உருளும் வழிபாடு நடந்தது.

இதனால் ஆவேசமடைந்த தலித் மற்றும் முற்போக்கு அமைப்பினர் உடுப்பி, மங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களில் நேற்று கண்டன‌ப் போராட்டம் நடத்தினர்.

நிர்வாகிகளுக்கு சிக்கல்

இதைத் தொடர்ந்து உடுப்பி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ஆகியோருடன் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். உருளு சேவை தொடர்பாக விரிவான அறிக்கை தரும்படி உத்தரவிட்டுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகி களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனிதர்களா அல்லது மாடுகளா?

இதற்கிடையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறாமல், மாடுகள் சாப்பிட்ட இலைகள் மீது தான் மனிதர்கள் உருளும் சேவை நடத்தப்பட்டதாக கோயில் நிர்வாகமும், போலீஸாரும் தெரிவிக்கின்றனர். இது குறித்து மங்களூரு மாநகர உதவி ஆணையர் ஏ.பி.இப்ராஹிம் கூறும்போது, “மனிதர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது உருளுவதற்கு தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் கோயில் மாடுகள் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது உருளுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே தான் கோயில் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, போலீஸார் பாதுகாப்பு வழங்கினர். கோயிலில் பந்தி நடைபெற்றபோது அனைத்து கதவுகளும் மூடப்பட்டன. இதனால் உணவை சாப்பிட்டது யார் என்பது தெரியவில்லை. விசாரணைக்கு பிறகே உண்மை வெளியாகும்” என்றார்.

SCROLL FOR NEXT