இந்தியா

மத்திய அரசு அனுப்பிய செயற்கை சுவாசக் கருவிகளை கிடப்பில் வைத்துள்ள மாநிலங்கள்: தணிக்கை செய்ய பிரதமர் மோடி உத்தரவு

செய்திப்பிரிவு

மத்திய அரசு அனுப்பிய செயற்கை சுவாசக் கருவிகள் சில மாநிலங்களில் பயன்பாடின்றி கிடப்பில் இருப்பதாக வந்துள்ளதால் இதுகுறித்து உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கோவிட் மற்றும் தடுப்பூசி சம்பந்தமான நிலவரம் குறித்து பிரதமர் ரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் கோவிட் சம்பந்தமான தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு எடுத்துரைத்தனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கரோனாவின் இரண்டாவதுஅலை கிராமப்புறங்கள் வரை பரவி உள்ளது. இதனால், அங்கும் ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் செறிவூட்டிகளை விநியோகிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்வதுடன், கண்காணிப்பதுடன், சுகாதார வளங்களை மேம்படுத்த வேண்டும்.

பரிசோதனையில் பாதிப்பு சதவீதம் அதிகரிக்கும் பகுதிகளில் உள்ளூர்மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு உத்திகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம். பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

குறிப்பாக, பரிசோதனையில் பாதிப்பு சதவீதம் அதிகரிகமாக உள்ள பகுதிகளில் ஆர்டி பிசிஆர் மற்றும் விரைவான பரிசோதனைகள் இரண்டையும் பயன்படுத்தி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் அவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக பதிவுசெய்ய வேண்டும்.
ஊரகப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு, கண்காணிப்பில் ஈடுபடுவதில் கவனம் செலுத்துவதற்காக சுகாதார வளங்களை அதிகரிக்க வேண்டும்.

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை தேவையான சாதனங்கள் வழங்கப்பட வேண்டும். வீட்டுத் தனிமை மற்றும் சிகிச்சை பற்றி ஊரகப் பகுதிகளில், எளிய மொழியில் வழிகாட்டுதல்கள் இடம் பெற வேண்டும்.

கிராமப்புற பகுதிகளில் ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஆக்சிஜன் செறிவூட்டிகளை உள்ளடக்கிய விநியோகத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ உபகரணங்கள், மின் விநியோகம் போன்ற சாதனங்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்வதற்காக சுகாதார பணியாளர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
மத்திய அரசு அனுப்பிய செயற்கை சுவாசக் கருவிகள் சில மாநிலங்களில் பயன்பாடின்றி கிடப்பில் இருப்பதாக வந்துள்ள தகவல் வந்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு வழங்கும் செயற்கை சுவாசக் கருவிகளின் பயன்பாடு மற்றும் இருப்பு குறித்து உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும்.
தேவை ஏற்பட்டால் முறையாக இயங்கும் செயற்கை சுவாசக் கருவிகள் பற்றி மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

கோவிட் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம், விஞ்ஞானிகள் மற்றும் துறை வல்லுநர்களின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்படுகிறது. இது அவர்களால் தொடர்ந்து வழி நடத்தப்படும்.

தடுப்பூசியை விரைவாக வழங்குவது தொடர்பாக மாநிலங்களுடன் அதிகாரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

தடுப்பூசித் திட்டம் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு மாநிலவாரியான தடுப்பூசி வழங்கல் பற்றி அதிகாரிகள் விரிவாக ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். வருங்காலத்தில் தடுப்பூசியின் இருப்பிற்கான திட்டத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT