மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோரில் 52 பேர் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிளாக் ஃபங்கஸ் தொற்று என்பது மைகோர்மைகோசிஸ் (mucormycosis) என அழைக்கப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையில் மிகவும் மோசமான நிலையின்போது அதிக அளவில் ஸ்டீராய்டு மருந்து அளிக்கப்பட்டிருந்தால், இந்தத் தொற்றுக்கு ஆளாகலாம்.
அதிலும் கரோனா வைரஸை எதிர்த்து நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தீவிரமாகச் செயல்படும்போது சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க ஸ்டீராய்ட் அளிக்கப்படுகிறது. ஸ்டீராய்ட் மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
இந்த பாதிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயில்லாதவர்களுக்கும் ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, பிளாக் ஃபங்கஸ் தொற்றைத் தூண்டிவிடும். இந்தத் தொற்றால் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மூக்கு, மூளை, கண் ஆகியவை பாதிக்கப்படும். சில நேரங்களில் கண்களைக் கூட எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம், பாதிக்கப்பட்ட உடல் உறுப்பையும் நீக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை பிளாக் ஃபங்கஸ் தொற்றுக்கு கரோனாவிலிருந்து குணமடைந்தோரில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். முதல் முறையாக பிளாக் ஃபங்கஸ் நோயால் உயிரிழந்தவர்கள் குறித்த பட்டியலை மகாராஷ்டிர மாநிலம் உருவாக்கியுள்ளது.
மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், “மகாராஷ்டிர மாநிலத்தில் 1500 பேர் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸால் ஏற்கெனவே மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் பிளாக் ஃபங்கஸ் நோய் மேலும் அழுத்தத்தை மக்களுக்கும், அரசுக்கும் ஏற்படுத்தும். இந்தத் தொற்றைச் சமாளிக்க ஒரு லட்சம் ஆம்போடெரிசின்-பி ஆன்டி வைரஸ் மருந்துகளுக்கு ஆர்டர் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டில் கரோனா முதல் அலையில் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் வெகு சிலரே மகாராஷ்டிராவில் உயிரிழந்திருந்தனர். ஆனால், கரோனா 2-வது அலையில்தான் பிளாக் ஃபங்கஸில் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
நீரிழிவு நோய் இருந்து, கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும், உடலில் சர்க்கரை அளவு நிலையாக இல்லாமல் இருப்பவர்களும், ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவில் மாறுபாடு உள்ளவர்களும் பிளாக் ஃபங்கஸ் தொற்றுக்கு அதிகமாக ஆளாகின்றனர் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.