தடுப்பூசி போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாமல் போனதற்காக மத்திய அரசைச் சேர்ந்தவர்கள் தூக்கில் தொங்க வேண்டுமா என்று மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். நோய்த் தொற்றுக்கு ஆளாவதைத் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.
ஆனால், பல மாநிலங்களில் தடுப்பூசி போதுமான அளவில் இல்லை என்பதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை கோவாக்சின், கோவிஷீல்ட் இரு தடுப்பூசிகள் மட்டுமே இருந்தாலும் போதுமான அளவு சப்ளை இல்லை.
இதுகுறித்து மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், “நாட்டில் ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நீதிமன்றங்கள் கருத்து தெரிவிக்கின்றன. நான் உங்களிடம் கேட்கிறேன்.
குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகளை நாளை தயாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த அளவு எங்களால் தயாரிக்க முடியவில்லை என்றால், நாங்கள் என்ன தூக்கில் தொங்க வேண்டுமா?
தடுப்பூசி குறித்த எந்த முடிவையும் அரசியல் லாபத்துக்காகவோ அல்லது வேறு எந்தக் காரணத்துக்கவோ எடுக்கவில்லை. மத்திய அரசு 100 சதவீதம் நேர்மையாகப் பணியாற்றி வருகிறது. அதில் பலவிதமான தடங்கல் வந்தாலும் அதையும் எதிர்கொள்கிறது.
நடைமுறையில் என்னவென்றால், சில விஷயங்கள் எங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கின்றன. அதை எங்களால் சமாளிக்க முடியுமா? மக்களுக்குத் தடுப்பூசி தட்டுப்பாடின்றிக் கிடைக்கத் தேவையான அனைத்து வழிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. அடுத்த சில நாட்களில் அதற்கான உறுதியான தகவல் வரும்” எனத் தெரிவித்தார்.
அப்போது உடன் இருந்த பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறுகையில், “ மத்திய அரசு சரியான நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யாமல் இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். உயிரிழப்பு 10 மடங்கு முதல் 100 மடங்கு அதிகரித்திருக்கும். ஆக்சிஜன் சப்ளை 300 மெட்ரிக் டன் முதல் 1,500 டன்னாக அதிகரித்துள்ளோம். கற்பனைக்கு எட்டாதவகையில் அதிகரிக்கும் கரோனாவால்தான் எங்கள் தயாரிப்பு முயற்சிகள் தோல்வி அடைந்தன” எனத் தெரிவித்தார்.