இந்தியா

இந்தியாவில் நடைபெற்ற மதம், அரசியல் கூட்டங்களே கரோனா பரவலுக்கு காரணம்: உலக சுகாதார அமைப்பு தகவல்

செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலுக்கு மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களே முக்கிய காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பி.1.617 உருமாற்ற கரோனாவைரஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவில் இந்த வகை வைரஸ் மீண்டும் பரவி வருவதும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பி.1.1.7 உள்ளிட்ட இதர கரோனா வைரஸ் வகைகளும் இந்தியாவில் பரவி வருகின்றன.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கரோனா வைரஸ் பரவுவதுகண்டுபிடிக்கப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதம் பேர் இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல பி.1.617.2 என்ற வைரஸும் பரவி வருகிறது. இந்த வைரஸால் 7 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த கரோனா வைரஸ்பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பிராந்தியத்தின் உயிரிழப்பில் இந்தியாவில் மட்டும் 93 சதவீத உயிரிழப்பு பதிவாகி உள்ளது. சர்வதேச கரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவில் 50 சதவீத தொற்றும் சர்வதேச உயிரிழப்பில் இந்தியாவில் 30 சதவீத உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.-பிடிஐ

SCROLL FOR NEXT