இந்தியா

உத்தர பிரதேசம் உன்னாவ் பகுதியில் கங்கை நதிக் கரையோரம் புதைந்த உடல்கள் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

உத்தர பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த வர்களின் உடல்கள் கங்கையில் வீசப்படுவதாகப் புகார் எழுந் துள்ளது. அந்த உடல்கள் கங்கை நதியில் மிதந்து சென்றபோது பிஹார் மாநிலத்தில் பக்சர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. சுமார் 72 உடல்கள் அதுபோல் மீட்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து உ.பி. மாநில மக்கள் மீது பிஹார் அரசு குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், உ.பி.யின் உன்னாவ் நகரின் கங்கை நதிக் கரையோரம் மண்ணில் ஏராளமான உடல்கள் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சில பகுதிகளில் அழுகிய உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர் மக்கள் புகார் அளித்தனர். அந்தப் பகுதிகளில் ஆய்வு செய்த போது மண்ணில் ஏராளமான உடல்கள் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

உடனடியாக உள்ளூர் போலீஸார் மற்றும் அதிகாரிகள் இணைந்து, அழுகிய உடல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரவீந்தர்குமார் கூறும்போது, ‘‘கங்கை நதிக் கரையில் இருந்து வெகு தூரத்தில் இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT