கோப்புப்படம் 
இந்தியா

பேராசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்த விவகாரம்: உ.பி. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஆதித்யநாத்

ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யில் மத்தியப் பல்கலைக்கழகமான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள சிவில் லைன் பகுதியில் புதுவகைவைரஸ் பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இங்கு கரோனாவால் பாதித்தவர் களின் மாதிரிகள் மத்திய அரசின் ஐசிஎம்ஆர் நிறுவனத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சூழலை கவனித்து உயிர்களை காக்கும்படி பிரதமர் மோடிக்கு மக்களவை அம்ரோஹா தொகுதி பகுஜன் சமாஜ் எம்.பி. குன்வார் தானிஷ் அலி கடிதம் எழுதினார்.

இந்நிலையில், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பல்கலை. வளாகத்திலுள்ள ஜவகர்லால் நேரு மருத்துவமனை அரங்கத்தில் மருத்துவ பேராசிரியர் களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் பேசிய முதல்வர் யோகி கூறும்போது, ‘‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு கரோனா சிகிச்சையில் தேவையான அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க, தற்போது மாநிலம் முழுவதிலும் 377 தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

330 டன்னாக இருந்த ஆக்ஸிஜன் தேவை ஆயிரமாக உயர்ந்துவிட்டது. இதை சமாளிக்க 1,030 டன்ஆக்ஸிஜன் விநியோகித்து வருகிறோம். பிரதமர் நிதி உதவிதிட்டத்திலும் 161 ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. உ.பி. யில் கடந்த 12 தினங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆறாயிரமாக குறைந்துள்ளது. எனினும், கரோனாவிற்கான பரிசோதனை யும், சிகிச்சையும் மாநிலம் முழுவதும் தொடர்கிறது’’ என்றார்.

இந்த ஆய்வின் போது பல்கலை.துணை வேந்தர் பேராசிரியர் தாரிக் மன்சூர், மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஷாயீத் அலி சித்திக்கீ, பதிவாளர் அப்துல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தனர். அலிகர் கூட்டத்திற்கு பின் முதல்வர் யோகி ஆக்ரா மற்றும் மதுராவிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘உ.பி.யில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக இதுவரை ஒரு கோடியே 43 லட்சம் தடுப்பூசிகள் போடப் பட்டிருப்பதாக’’ தெரிவித்தார். குழந்தைகளுக்காக தனி கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கவும் உ.பி . அரசு ஏற்பாடு செய்வதாக முதல்வர் யோகி தெரிவித்தார்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பாஜக தலைவர்களை வழக்கமாக எந்த கூட்டங்களுக்கும் அழைப்ப தில்லை. இதை மீறி ஒருமுறை மத்திய கல்வித் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி அழைக்கப்பட்ட போது அவரை மாணவர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.

இச்சூழலில், இப்பல்கலைக்கழகத்திற்கு வந்த முதல் பாஜக தலைவராகி விட்டார் முதல்வர் யோகி. இவருக்கு முன் சுமார் 33 வருடங்களுக்கு முன்பாக காங்கிரஸ் முதல்வரான என்.டி.திவாரி இங்கு வந்திருந்தார்.

SCROLL FOR NEXT