பல்ராம் பார்கவா 
இந்தியா

கரோனா அதிகமுள்ள மாவட்டங்களுக்கு மேலும் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்: ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கரோனா தொற்று அதிகமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேலும் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கு அவசியம் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பல்ராம் பார் கவா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டில் நான்கில் மூன்று பகுதி மாவட்டங்கள், அதாவது 718 மாவட்டங்களில் கரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களிலும் இந்த நிலை உள்ளது. இந்த மாவட்டங்களில் கரோனா பாசிட்டிவ் விகிதம் 10-ல் 5 சதவீதம் அளவுக்காவது குறைய வேண்டும். இதற்கு மேலும் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கு அவசியமாகும்.

டெல்லியில் கரோனா பாசிட்டிவ் விகிதம் 35 சதவீதம் வரை உயர்ந்து, தற்போது 17 சதவீதமாக குறைந்துள்ளது. என்றாலும் தற்போது அங்கு ஊரடங்கை நீக்குவது பேரழிவில்தான் முடியும்.

கரோனா தொற்று நோய்க்கான தேசிய பணிக்குழுவின் ஏப்ரல் 15-ம் தேதி கூட்டத்தில், பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதம் மற்றும் அதற்கு மேல் உள்ள பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இது சற்று தாமதமாக அமல்படுத்தப்பட்டது வருத்தம் அளிக்கிறது.

கொள்கை வகுப்பாளர்களுடன் இணைந்தே ஐசிஎம்ஆர் செயல் படுகிறது. உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் கரோனா தொற்று நோய் காலத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவது ஏற்க கூடியது அல்ல. இவ்வாறு பல்ராம் பார்கவா கூறினார். -பிடிஐ

SCROLL FOR NEXT