பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை யைத் தொடங்கியிருப்பது வரலாற்றுப் பாதையை திருப்பும் முயற்சி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொச்சி கடற்பரப்பில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் முப்படை தளபதிகள் மாநாடு நேற்று தொடங்கியது. முப்படை தளபதிகள் மாநாடு தலைநகருக்கு வெளியே நடைபெறுவது இதுவே முதல்முறை.
இம்மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
வரலாற்றுப்பாதையை மாற்றிய மைக்கும் முயற்சியாகவே பாகிஸ் தானுடன் பேச்சுவார்த்தை தொடங் கியுள்ளது. தீவிரவாதத்துக்கு முடிவு கட்டவும், அமைதியான உறவைக் கட்டமைக்கவும், நமது பிராந்தியத்தில் மிகச் சிறந்த ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணவும் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைக்கு முயன்றுள்ளோம்.
இப்பாதையில் ஏராளமான இடையூறுகளும், தடைகளும் உள்ளன. ஆனாலும் நம் முயற்சி களால் குழந்தைகளின் எதிர்காலம் அமைதியாக இருக்கும். எனவே நாம் அவர்களின் ஈடுபாட்டை தொடர்ந்து பரிசோதிக்கிறோம்.
இதற்காக நாம் தேசிய பாதுகாப்பு முகமை (என்எஸ்ஏ) அளவிலான, பாதுகாப்பு நிபுணர்களை நேருக்குநேர் சந்திக்க வைத்து பேச்சு வார்த்தையை தொடங்கி யுள்ளோம்.
அதேசமயம் நாம் ஒருபோதும் பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்த மாட்டோம். பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு எதிரான ஈடுபாட்டைப் பொறுத்து நாம் அவர்களை மதிப்பீடு செய்வது தொடரும்.
நமது எதிர்காலம் மற்றும் உலகில் நமக்கான இடம் என்பதில் நமது அண்டை நாடு அதிதீவிர பங்கு வகிக்கிறது. ஆனால் நமது அண்டை நாடு பாதுகாப்பு அச்சுறுத்தலை அளிக்கும் சிக்கலான ஒன்றாக உள்ளது. தீவிரவாதம், போர் நிறுத்த ஒப்பந்த மீறல், பொறுப்பற்ற வகையில் அணு ஆயுத உருவாக்கம், எல்லையில் ஊடுருவல், ராணுவத்தை நவீனப்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது உள்ளிட்டவற்றை நாம் எதிர்கொள்கிறோம். மேற்கு ஆசியாவில் நிச்சயமற்ற தன்மையின் அளவு கூடிக்கொண்டே இருக்கிறது.
நமது பிராந்தியத்தில் அரசியல் நிச்சயமற்ற தன்மை, பலவீனமான அமைப்புகள், உட்பூசல் ஆகியவை நிலவுகின்றன. நமது நிலத்திலும் அண்மை கடல் பகுதியிலும் வலிமையான நாடுகளின் தலையீடு அதிகரித்துள்ளது.
நமது ராணுவ பலம், உட்கட்டமைப்பு மேம்பாடு, அண்டை நாடுகளுடன் நெருக்கத்தை மேம்படுத்துவதை தொடர வேண்டும். டிஜிட்டல் மற்றும் விண்வெளித் துறையில் நமக்குள்ள தொழில்நுட்ப அறிவை ராணுவம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் வரலாற்றில் கடலின் தாக்கம் அதிகம். எதிர்காலமும், வளமும், பாதுகாப் பும் கூட கடலைச் சார்ந்தே அமைந்திருக்கிறது. உலகின் அதிர்ஷ்டத்துக்கான சாவியும் கடலிடம் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிலை திறப்பு
கொல்லத்தில் முன்னாள் முதல்வர் ஆர்.சங்கரின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஈழவ சமுதாய அமைப்பான ஸ்ரீ நாரயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு அழைப்பு விடுத்திருந்த இந்த அமைப்பு பின்னர் அவரை வரவேண்டாம் என்க கூறிவிட்டது.
இதனால், முதல்வரை அவமானப்படுத்தியதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியினர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.