கடப்பா மாவட்டம் கலசபாடு மண்டலம், மாமிள்ளபள்ளி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 8-ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 10 கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கல்குவாரி ஒப்பந்ததாரர் ரகுநாத ரெட்டி, நாகேஸ்வர் ரெட்டி ஆகிய இருவரை போலீஸார் கைது செய்திருந்தனர்.
இதனிடையே இந்த வெடி விபத்து குறித்து விசாரிப்பதற்காக 5 அரசுத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அரசு நியமித்தது. விசாரணையில், கல்குவாரிக்கு கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவிலிருந்து 1000 ஜெலட்டின் குச்சிகள், 15 டெட்டனேட்டர்களை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரான ஒய்.எஸ். பிரதாப் ரெட்டி மூலமாக வாங்கப்பட்ட விவரம் தெரியவந்தது.
பிரதாப் ரெட்டிக்கு பல குவாரிகள் இருந்தாலும், இவர் ஜெலட்டின் குச்சிகளை விற்கும் உரிமம் பெற்றுள்ளார். இந்த உரிமம் கடந்த 2018-ம்ஆண்டே காலாவதியாகி விட்ட நிலையிலும், இவர் தொடர்ந்து வெடி மருந்துகளை விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிரதாப் ரெட்டியை போலீஸார் கைது செய்தனர்.