கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களைத் தாக்கும் பிளாக் ஃபங்கஸ் தொற்றைத் தடுக்க ஃபங்கஸ் தடுப்பு மருந்துகளை அதிகமாகத் தயாரிக்க வேண்டும் என மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் ஏராளமானோர் தற்போது பிளாக் ஃபங்கஸ் தொற்று எனப்படும் முகோர்மைகோசிஸ் தொற்றுக்கு ஆளாவது அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
பிளாக் ஃபங்கஸ் என்றால் என்ன?
பிளாக் ஃபங்கஸ் தொற்று என்பது முகோர்மைகோசிஸ் (mucormycosis.) என அழைக்கப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையின்போது மிகவும் மோசமான நிலையின்போது அதிக அளவில் ஸ்டீராய்டு மருந்து அளிக்கப்பட்டிருந்தால், இந்தத் தொற்றுக்கு ஆளாகலாம். அதிலும் கரோனா வைரஸை எதிர்த்து நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தீவிரமாகச் செயல்படும்போது சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க ஸ்டீராய்ட் அளிக்கப்படுகிறது.
ஸ்டீராய்ட் மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இந்த பாதிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயில்லாதவர்களுக்கும் ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, பிளாக் ஃபங்கஸை அதாவது முகோர்மைகோசிஸ் தொற்றைத் தூண்டிவிடும்.
பாதிப்பு
கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் இந்தத் தொற்றால் மூக்கு, மூளை, கண் ஆகியவை பாதிக்கப்படும். சில நேரங்களில் கண்களைக் கூட எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம், பாதிக்கப்பட்ட உடல் உறுப்பையும் நீக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
அறிகுறிகள்
இந்தத் தொற்று ஏற்படும்போது கடும் தலைவலி, காய்ச்சல், கண்களுக்குக் கீழ்ப்பகுதியில் வலி, மூக்கில் நீர்வடிதல், சைனஸ் பிரச்சினை, கண்களில் திடீரென பார்வைத் திறன் குறைதல் போன்றவை அறிகுறிகளாகும்.
இதுவரை மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரும், உயிரிழப்போரும் அதிகரித்து வருகின்றனர்.
இதையடுத்து, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் மருந்து நிறுவனங்களுக்கு விடுத்த வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் தற்போது பிளாக் ஃபங்கஸ் தொற்றால் பாதிக்கப்படுவதால், திடீரென ஆம்ஃபோடெரிசின் பி மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. முகோர்மைகோசிஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவர்கள் அதிகமாக ஆம்ஃபோடெரிசின்-பி மருந்தைப் பரிந்துரைத்து வருவதால், அதன் தேவை அதிகரித்துள்ளது. ஆதலால், மருந்து நிறுவனங்கள் ஆம்ஃபோடெரிசின் பி மருந்தின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்தும் அவசரத் தேவைக்கு இறக்குமதி செய்யலாம்.
மருந்து நிறுவனங்களிடம் ஆம்ஃபோடெரிசின் பி மருந்தின் இருப்பைத் தெரிந்துகொண்டு அதன் தேவையைப் பொறுத்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆம்ஃபோடெரிசின் பி மருந்து வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.