கரோனா வைரஸ் பரவல் காலத்தில் சில மாநிலங்களிலும், உ.பியிலும் (பஞ்சாயத்து தேர்தல்) தேர்தல் நடத்தினால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகளைக் கணிக்கத் தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், அரசுகள் தவறிவிட்டன என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு ரியல்எஸ்டேட் உரிமையாளர் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ரூ.27 லட்சம் பெற்றுக்கொண்டு வீ்ட்டை ஒப்படைக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் தன்னை கைது செய்யக்கூடாது என்பதற்காக முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த போது, உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்தபோது, நீதிபதி சித்தார்த் கூறுகையில் “ உத்தரப்பிரதேச அரசு நகர்புறங்களில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மிகுந்த சிரமப்படுகிறது, கிராமப்புறங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும், பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதும், பரிசோதனைகளை நடத்துவதும் கடினமாக இருக்கிறது.
கரோனா முதல் அலையின்போது உத்தரப்பிரதேசத்தின் கிராமங்களுக்கு தொற்று அதிகமாகப் பரவவில்லை. ஆனால், 2-வது அலையில் அதிகமாகப் பரவிவிட்டது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போதுமான அளவு அரசு தன்னை தயார்படுத்தவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
சிறைச்சாலைகளில் அதிகமான கைதிகள் இருக்க வேண்டாம், பரோலில் கைதிகளை அனுப்புவது குறித்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. அதை மனதில் கொள்ளாமல் இந்த வழக்கில் நாங்கள் உத்தரவிட்டால், அது சிறைச்சாலைகளில் அதிகமானோர் செல்வதற்கு வழிவகுத்துவிடும்.
சமீபத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் ஏராளமான மக்கள் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் கிராமங்களில் குற்றங்கள் பதிவாவது அதிகமாக இருக்கிறது. பஞ்சாயத்து தேர்தல் முடிந்தபின், அனைத்து கிராமங்களிலும் உள்ள சூழலையும் மனதில் வைத்துப்பார்த்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் கரோனாவில் பாதிக்கப்படலாம் மற்றும் அவர்கள் பாதிக்கப்பட்டு தொற்று கண்டறியப்படாமல் இருக்கலாம்.
கரோனா வைரஸ் பரவல் காலத்தில் சில மாநிலங்களிலும், உ.பியிலும் (பஞ்சாயத்து தேர்தல்) தேர்தல் நடத்தினால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகளைக் கணிக்கத் தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், அரசுகள் தவறிவிட்டன
குற்றம்சாட்டப்பட்டவர்களை சிறையில் தள்ளினால், அவர்களுக்கு கரோனாவிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுமா என அரசு இதுவரை உறுதியளிக்கவில்லை. அசாதாரண சூழலில், அசாதார நிவாரணம் தேவை. அவநம்பிக்கையான, வேதனையான சமயத்தில் தீர்வுக்கே தீர்வு தேவைப்படும்.
ஆதலால், முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்தவரை 2022ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதிவரை கைது செய்யக்கூடாது”
இவ்வாறு நீதிபதி தெரிவி்த்தார்.