இந்தியா

தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு

செய்திப்பிரிவு

தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

1998-ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 11-ம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது.

ட்விட்டர் பதிவு

இதையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “தேசிய தொழில்நுட்ப நாளில் நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியை நாம் வணங்குவோம்.

1998-ம் ஆண்டு பொக்ரான் சோதனையை நாம் பெருமிதத்துடன் நினைவுகூர்வோம். இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வலிமையை இச்சோதனை நிரூபித்தது.

எந்தவொரு சவாலான சூழ்நிலையிலும் விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பாளர்களும் தக்க தருணத்தில் முன்வந்து சவாலை முறியடிக்க உழைக்கின்றனர். கடந்த ஓராண்டாக கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் கடுமையாக பணியாற்றுகின்றனர். அவர்களின் முனைப்பு மற்றும் வைராக்கியத்தை நான் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

அணுகுண்டு சோதனைகள்

1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் மூன்று அணுகுண்டு சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. மேலும் இரு சோதனைகள், மே 13-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.

‘ஆபரேஷன் சக்தி' என்ற பெயரிலான இந்த சோதனை, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல்கலாம்தலைமையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT