இந்தியா

ஜாமீனில் விடுதலையான பிறகு முதல் முறையாக கட்சியினருடன் கலந்துரையாடினார் லாலு: கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஜாமீனில் விடுதலையான ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது கட்சிப் பிரமுகர்களுடன் காணொலி மூலம் நேற்று கலந்துரையாடினார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிஹார் முதல்வராக பதவி வகித்தார். அப்போது கால்நடை தீவன ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லாலுமீது 5 வழக்குகளை பதிவு செய்தது சிபிஐ. இதில் முதல் வழக்கில் 2013-ல் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதையடுத்து சிறையிலடைக் கப்பட்ட அவர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் 2-வது வழக்கில் லாலு குற்றவாளி என 2017-ம் ஆண்டுடிசம்பரில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து. ஜார்க்கண்டின் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டெல்லியின் எய்ம்ஸ்மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, அவரது குடும்பத்தார் லாலுவின் உடல்நிலையை சுட்டிக் காட்டி ஜாமீன் கேட்டு வந்தனர். இவர் மீதான முக்கியமூன்று வழக்குகளிலும் அடுத்தடுத்து ஜாமீன் கிடைத்தது.

இதனிடையே உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டெல்லியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அங்கிருந்தபடி தனது கட்சிப் பிரமுகர்களுடன் லாலு பிரசாத் யாதவ் காணொலி மூலம் நேற்று முன்தினம் கலந்துரையாடினார். அப்போது முதலில் பேசிய லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி, தனது தந்தை உடல்நிலை இன்னும் சீராகவில்லை என்பதால் அதிகம் பேசமாட்டார் என தெரிவித்தார்.

இதையடுத்து, லாலு பேசும்போது “ஆர்ஜேடி எம்எல்ஏ-க்கள் மற்றும் கடந்த தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட் டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். தங்கள் பகுதியில் ஆர்ஜேடி கரோனா சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 243 தொகுதியிலும் லாலு உணவகங்களை அமைத்து ஏழைகளுக்கு இலவச உணவு வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

SCROLL FOR NEXT