இந்தியா

உ.பி.யின் காஜியாபாத்தில் கரோனா ஆரம்பநிலை சிகிச்சைக்கான மருந்துகள் விநியோகம்: தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரியின் முயற்சிக்கு வரவேற்பு

ஆர்.ஷபிமுன்னா

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கரோனா ஆரம்பநிலைசிகிச்சைக்கான மருந்துகள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அங்கு சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்ட தமிழரான சி.செந்தில் பாண்டியன் எடுத்துள்ள முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் உ.பி.யில் லக்னோ மற்றும் காஜியாபாத்தில் அதிகமாகஉள்ளது. இதை கட்டுப்படுத்த இவ்விரண்டு மாவட்டங்களிலும் தென் மாநிலங்களை சேர்ந்த உ.பி.யின் இரு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக ஏப்ரல் 27-ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் நியமித்தார். தலைநகர் லக்னோவில் கேரளாவை சேர்ந்த ரோஷன்ஜேக்கப்பும் டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத்தில் தமிழரானசெந்தில் பாண்டியனும் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்விருவருமே உ.பி. அரசின் துறை செயலாளர்களாக இருப்பவர்கள்.

இதில் மதுரையை சேர்ந்தசெந்தில் பாண்டியன் காஜியாபாத்தில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளார். இதன்படி, கரோனா பரிசோதனைக்கு வருவோருக்கு ‘கரோனாகிட்’ எனும் பெயரில் ஆரம்பநிலை சிகிச்சைக்கான எட்டு வகை மருந்துகளை இலவசமாக அளிக்கின்றனர்.

இதில், காய்ச்சல், தலைவலி, சளி ஆகியவற்றுக்கான மருந்துகளுடன் இரும்பு, வைட்டமின் சி உள்ளிட்ட சத்து மாத்திரைகளும் இடம்பெற்றுள்ளன. இவை சாப்பிடும் முறையும் அதனுள் இருக்கும் குறிப்பில் தரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக எடுக்கப்பட்டு வரும் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சி.செந்தில்பாண்டியன் கூறியதாவது:

இந்தப் பணிக்காக அதிவிரைவு குழுக்களை அமைத்துள்ளோம். இவர்கள் மாவட்டம் முழுவதிலும் உள்ளஅரசு மற்றும் தனியார் பரிசோதனை மையங்களுக்கு வருவோருக்கு கரோனா கிட்டையும் அளிக்கிறார்கள். செயலிகள் மூலம் உணவு விற்பனை செய்யும் நிறுவன டெலிவரி ஆட்கள் மூலமாக அவர்கள் செல்லும் வீடுகளுக்கும் இதனை வழங்குகிறோம்.

தொற்றுக்கான அறிகுறி இருப்பவர்கள் பயனடைய தினமும் சுமார் 5,000 கிட்களை வழங்குகிறோம். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதால் மருத்துவமனைக்கு வராமலேயே கரோனாவை குணப்படுத்த முடிகிறது. இந்தமருந்துகளில் சில கடைகளிலும் கிடைக்காது என்பதால் எங்கள் கிட் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

தொடக்க அறிகுறிகளை பொருட்படுத்தாமல் விடுவதால்தான் ஆக்சிஜன் தேவை அளவுக்கு கரோனா பாதித்து விடுகிறது. எங்கள் முயற்சியால் வரும் 15 நாட்களில் சுமார் 40 சதவீதம் வரை தொற்று குறையும் என நம்புகிறோம்” என்றார்.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியார் மற்றும் அரசு விநியோக முறையை தனது அலுவலக நேரடி கண்காணிப்பில் செந்தில் பாண்டியன் கொண்டு வந்துள்ளார். நாள்தோறும் அரசு52 டன் ஆக்சிஜன் தரும் நிலையில், பற்றாக்குறையை சமாளிக்க உத்தராகண்டின் ஹரித்துவாரிலுள்ள ‘பெல்' மத்திய நிறுவனத்தில் இருந்தும் ஆக்சிஜன்பெறப்படுகிறது. இதில் 750 சிலிண்டர்கள், வீடுகளில் சிகிச்சை பெறுவோருக்கு நிரப்ப பயன்படுத்தப்படுகிறது.

செந்தில் பாண்டியன் 2002-ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று உ.பி. அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது முயற்சி, மற்ற சில மாவட்டங்களிலும் பின்பற்றப் படுகிறது. இதை அறிந்த தமிழ கத்தின் 2 தென் மாவட்ட அதிகாரிகள் இதே முறையை கடைப்பிடிக்க தமிழக அரசுக்கு பரிந் துரைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT