இந்தியாவில் பரவிவரும் இரட்டை உருமாற்ற கரோனா வைரஸ் அதிக ஆபத்துமிகுந்தது. தடுப்பூசிகள் மனிதர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பையே எதிர்க்கும் வல்லமை உருமாற்றம் அடைந்த வைரஸ்களுக்கு இருக்கிறது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டை உருமாற்ற கரோனா பி.1.617 என்ற வைரஸ் கண்டறியப்பட்டது. இதில் இ484கியூ வகை வைரஸ் முதல் அலையில் இருந்த வைரஸின் குணத்தை ஒத்திருந்தது.
ஆனால், இ484கே வகை வைரஸ் வேகமாகப் பரவும் பிரேசில், தென் ஆப்பிரிக்க வகையைச் சேர்ந்தது. இதில் எல்452ஆர் வகை வைரஸ் மனிதர்களைத் தாக்கினால் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்துவிடும் தன்மை கொண்டவை.
உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''கரோனா வைரஸ்களை உலக சுகாதார அமைப்பு பல வகைகளாகப் பிரித்துள்ளது. இதில் பி.1.617 வகை உருமாற்ற வைரஸ், அதிகமான தொற்றை ஏற்படுத்தக்கூடியவை.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றால், இன்னும் புதிய வகை வைரஸ்கள் உருமாற்றம் பெற்று, ஆபத்தானதாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.
இந்த வகை வைரஸ் தன்னைப் பிரதி எடுக்கவும், அதிகமாகப் பரவவும், தொடர்புபடுத்தவும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. அதாவது உருமாற்றம் அடையும் தன்மை கொண்டது. தற்போது நமக்கிருக்கும் தடுப்பூசிகள் உருமாற்றம் அடைந்துவரும் வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படக் கூடியவை.
நாட்டில் கரோனா வைரஸ் அதிகமாகப் பரவுவதற்கு உருமாற்றம் அடைந்த வைரஸ் மட்டும் காரணமல்ல. மக்கள் அதிகமான அளவில் கூடுவதும், கூட்டமாகச் சென்று கலப்பதும் முக்கியக் காரணம்.
இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் பரவல் மெதுவாக, பல மாதங்களாக நடக்கும். ஆனால், பரவல் அதிகரித்தபின் அதைக் கட்டுப்படுத்துவதும், அடக்குவதும் கடினம். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை இந்த வைரஸ் தொடர்புள்ளதாக்கி, அதைப் பன்மடங்கு பல்கிப் பெருக்கும் தன்மை கொண்டதால், கட்டுப்படுத்துவது கடினம்.
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் போதாது. இப்படியே சென்றால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க மாதங்கள் ஏன் ஆண்டுக்கணக்கில் கூட ஆகலாம். குறிப்பாக தடுப்பூசி மூலம் மனிதர்களுக்குக் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும், இயற்கையாகக் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும் எதிர்க்கும் திறன் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு இருப்பதாக எந்தவிதமான ஆதாரங்களும், புள்ளிவிவரங்களும் இல்லை.''.
இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
குறிப்பாக தடுப்பூசி மூலம் மனிதர்களுக்குக் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும், இயற்கையாகக் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட எதிர்க்கும் திறன் படைத்தவை. என முன்பு தெரிவித்த நிலையில், ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,அதற்கான ஆதாரங்களும், புள்ளிவிவரங்களும் இல்லை என சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.