ஆதிர் ரஞ்சன் சவுத்திரி எம்.பி. | கோப்புப் படம். 
இந்தியா

கரோனா பரவல்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்

ஏஎன்ஐ

நாடு முழுவதும் கரோனா 2வது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மக்களுக்கான தீர்வுகள் குறித்து விவாதிக்க வழிவகை செய்யுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.

அக்கடிதத்தின் விவரம் வருமாறு:

நாட்டின் கரோனா பெருந்தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதைத் தாங்கள் நிச்சயமாக நன்றாக அறிந்திருப்பீர்கள்.
இத்தகைய நெருக்கடியான நேரத்தில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு நான் வேண்டுகிறேன். தேசத்தின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பல்வேறு நாடாளுமன்றத் தொகுதிகளின் பிரதிநிதிகளும் உள்ளனர். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினால், உறுப்பினர்கள் கரோனா பேரிடரில் தங்களின் தொகுதி மக்கள் அனுபவித்துவரும் இன்னல்களை, எதிர்நோக்கும் உதவிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்க முடியும். இதன்மூலம் துயரப்படும் மக்களுக்குத் தீர்வு கிட்டும். இது தொடர்பாக தங்களின் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,66,161 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,46,116 ஆக அதிகரித்துள்ளது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.

SCROLL FOR NEXT