கோப்புப்படம் 
இந்தியா

3 நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது: ஒரு வாரத்தில் 5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு 

பிடிஐ

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரத்தில் 5-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது.

பெட்ரோல் லிட்டருக்கு 26 பைசாவும், டீசல் லிட்டருக்கு 33 பைசாவும் இன்று உயர்த்தப்பட்டது. இதனால் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.91.53 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.82.06 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு காரணமாக, ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.42 என அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசம், அனுப்பூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.12 என அதிகரித்துள்ளது.

இந்த இரு நகரங்களில் மட்டுமே பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துவந்த நிலையில் அந்தப் பட்டியலில் மகாராஷ்டிராவும் சேர்ந்தது. மகாராஷ்டிராவில் பர்பானியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.20 ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் 2-வது முறையாக பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100க்கு அதிகமாகச் செல்கிறது. இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது.

கடந்த ஒரு வாரத்தில் 5-வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்தியுள்ளன. இந்த 5 நாட்களில் பெட்ரோல் மீது ரூ.1.14 பைசாவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.1.33 பைசாவும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.21.58 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.19.18 பைசாவும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே கடந்த மார்ச் 24ஆம் தேதி பெட்ரோல் 67 பைசாவும், ஏப்ரல் 15-ம் தேதி 74 பைசாவும் விலை குறைக்கப்பட்டது.

தற்போது பெட்ரோல் விலையில் 60 சதவீதம் மத்திய அரசு, மாநில அரசுகள் வரியாகவும், டீசல் மீது 54 சதவீதம் வரியாகவும் செல்கிறது. பெட்ரோல் மீது மத்திய அரசு கலால் வரியாக லிட்டருக்கு ரூ.32.90, டீசல் மீது லிட்டருக்கு ரூ.31.80 பைசா வசூலிக்கிறது.

          
SCROLL FOR NEXT