இந்தியா

அசாம் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்பு: விழாவில் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

அசாம் மாநில முதல்வராக பாஜகவின் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

அசாமில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 இடங்களில் பாஜக 60 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 15 இடங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் ஆட்சியை பாஜக தக்கவைத்தது.

ஏற்கெனவே முதல்வராக இருந்து வந்த சர்பானந்த சோனாவால் மற்றும் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கி பாஜகவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஹிமந்தா பிஸ்வா சர்மா இருவருக்கும் முதல்வர் பதவியை பிடிப்பதில் போட்டி ஏற்பட்டது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் 2019 மக்களவைத் தேர்தலிலும் அசாமில் பாஜக வெற்றி பெறுவதற்கு ஹிமந்தா பிஸ்வா சர்மா முக்கிய பங்காற்றியவர். நடந்து முடிந்த அசாம் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவின் வெற்றிக்காக பெரும் பணியாற்றிவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.

இந்த போட்டியால் இருவரும் நேற்று முன்தினம் டெல்லி சென்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது.

இதையடுத்து, குவாஹாட்டியில் நேற்று நடந்த பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பதவியில் இருந்து சர்பானந்த சோனாவால் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அவர் அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அசாம் மாநில புதிய முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஜெகதீஷ் முகி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று காமக்யா தேவி கோயில் உள்ளிட்ட கோயில்களில் வழிபட்டார்.

          
SCROLL FOR NEXT