போபாலில் யூனியன் கார்பைடு ஆலையில் தேங்கியுள்ள நச்சுக் கழிவுகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இயங்கிய யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் ஆலையில் 1984 டிசம்பர் 2-ம் தேதி ஏற்பட்ட விஷவாயு கசிவில் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.
ஆலையைச் சுற்றி சுமார் 3 கி.மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. ஆலைப் பகுதியில் சுமார் 346 டன் நச்சுக் கழிவுகள் அப் படியே தேங்கியுள்ளன. 31 ஆண்டு களாகியும் அவை அகற்றப்படாமல் போபால் மக்களை இன்றும் அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் போபாலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். அவரிடம் யூனியன் கார்பைடு நச்சுக் கழிவுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து நச்சுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது குறித்த செயல்திட்டத்தை தயாரித்து வருகிறோம்.
கழிவை அகற்றும் முன்பு அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். விரைவில் இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யூனியன் கார்பைடு ஆலை நச்சுக் கழிவுகளை தார் மாவட்டம் பிதம்பூர் பகுதியில் புதைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
எனவே நச்சுக் கழிவுகளை எரித்துவிட புதிய திட்டம் தீட்டப் பட்டுள்ளது. அதற்கான சோதனை கள் கடந்த ஆகஸ்ட் முதல் நடைபெற்று வருகின்றன.