கரோனா வைரஸ் 2-வது அலை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் அதை இந்திய அரசு கொண்டு கொள்ளவில்லை. மதரீதியான கூட்டம், அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி, தடுப்பூசி செலுத்துவதை மந்தப்படுத்தியது என அனைத்துக்கும் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என லான்செட் மருத்துவ இதழ் விமர்சித்துள்ளது.
மிகப்பிரபலமான மருத்துவ இதழான தி லான்செட் இதழ் தனது தலையங்கத்தில் இந்தியாவில் கரோனா 2வது அலை உருவானது குறித்து மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும் எனப் பல முறை மருத்துவ வல்லுநர்கள் எச்சரி்த்தும் அதை மத்திய அரசு கொண்டு கொள்ளவில்லை. ஐசிஎம்ஆர் நடத்திய செரோ சர்வேயில் இ்ந்தியாவில் 21 சதவீதம் மக்களே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தனர்.
சூப்பர் ஸ்ப்ரெட்டர் எனப்படும் மதவழிபாடு (கும்பமேளா) கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்த அனுமதித்ததும், கரோனாவைக் கட்டுப்படுத்த போதுமான தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்காததற்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
கரோனா தடுப்பூசி செலுத்துவதும் மிகவும் மெதுவாகவே நடந்தது, இதுவரை 2 சதவீதத்துக்கும் குறைவான மக்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் 2-வது அலை குறித்து பலமுறை மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கடந்த மார்ச் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அளி்த்த பேட்டியில், கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவில் முடிவும் நிலையில் இருக்கிறது எனத் தெரிவி்த்தார்.
கரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும், வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவக்கூடும் எனத் தெரிவித்த போதிலும்கூட, இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்தவுடன் இந்தியா கரோனா வைரஸை தோற்கடித்துவிட்டது என்று மத்திய அரசு எண்ணத் தோன்றியது” எனத் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் அமைப்பின் தொற்றுநோய்ப் பிரிவின் முன்னாள் தலைவர் மருத்துவர் லலித் காந்த் கூறுகையில் “இந்தியாவில் இந்தச் சூழல் ஏற்பட்டதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
டெல்லி அரசின் கோவிட் தடுப்புக் குழுவின் தலைவரும், லிவிர் அன்ட் பிலைரி சயன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான மருத்துவர் எஸ்.கே.செரின் கூறுகையில் “கரோனா வைரஸ் பரவலுக்கு மத்திய அரசின் மெத்தனம் காரணம்தான். இன்னும் தாமதப்படுத்தாமல் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும், அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.