கேரளாவில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் செல்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 41 ஆயிரத்து 971 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அழுத்தத்தை முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க வார்டு அளவில் கரோனா தடுப்பு குழுக்களை அமைக்க முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் தற்போது 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
கேரளாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 9 நாட்கள் முழு ஊரடங்கு நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 42 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 64 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்கு காணொலி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
“ கரோனா 2-வது அலையில் மாநிலம் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. உருமாறிய கரோனா வைரஸ் வீரியமாகவும், பரவும் வேகமும் அதிகமாக இருக்கிறது. கரோனா முதல் அலையின் போது அதைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் செயல்பட்டது சிறப்பாகஇருந்தது. கரோனா 2-வது அலையிலும் வைரஸ் தடுப்புப் பணியில் உள்ளாட்சி நிர்வாகத்தின் பங்கு சிறப்பாக இருந்து வருகிறது.
உள்ளாட்சி நிர்வாகங்கள் சிலவற்றில் மருத்துவ வசதிகள் பற்றாக்குறை இருந்து வருகிறது. அந்த சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும். சரியான இடத்தில் விரைந்து கரோனா சிகிச்சை மையங்கள் உடனடியாக உருவாக்கப்படும். போதுமான அளவு சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், துப்புறவு பணியாளர்கள் அமர்த்தப்படுவார்கள்.
சமீபத்தில் கரோனா நோயாளி ஒருவரை பைக்கில் அமரவைத்து சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அதுபோன்று செய்யக்கூடாது. அனைத்து கரோனா சிகிச்சை மையங்களுக்கும் போதுமான ஆம்புலன்ஸ் சேவை உருவாக்கப்படும்.
உள்ளாட்சிஅளவில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும். அரசு மருத்துவர்களோடு, தனியார் மருத்துவர்களும் கரோனா தடுப்புக் குழுவில் இணைக்கப்பட்டு, பணியாற்றுவார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகமாகஇருப்தால், அதற்கு அதிகமான கவனம் செலுத்த வேண்டும். இந்த லாக்டவுன் காலத்தில் மக்கள் தேவையில்லாமல் வெளியேவரக்கூடாது. அவசரமான சூழல்களுக்கு ஆன்-லைன்மூலம் அனுமதி பெற்று இ-பாஸ் உதவியுடன் பயணிக்கலாம்”
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.