நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் ரூ.2 லட்சம் வரையில் ரொக்க பணம் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் மே 31 வரையான காலத்தில் இது அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருமான வரித் துறை புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கரோனா மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் ரூ.2 லட்சம் வரையிலான ரொக்கத் தொகையை ஏற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நோயாளியின் ஆதார் அட்டை எண் அல்லது நிரந்தர கணக்கு எண் (பான்) விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் நோயாளிக்கும், அவருக்குரிய மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை அளிக்கும் நபருக்குமான உறவை தெரிவிக்க வேண்டும்.
இந்த அறிவிக்கையின்படி சிகிச்சை தரும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், சிறிய மையங்கள் உள்ளிட்ட 19 மையங்கள், வருமான வரிப்பிரிவு சட்டத்தின் கீழ் (269எஸ்டி) வரி விலக்கு பெற முடியும். இப்புதிய உத்தரவின்படி நோயாளிக்குத் தேவைப்படும் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தில் ஒரே நாளில் நோயாளியின் உறவினர் ரூ. 2 லட்சம் வரை ரொக்க பணம் அளித்தால் அதை ஏற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க தொகையை ஏற்கக் கூடாது என விதி உள்ளது. கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இருப்பினும் தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் சூழலில் ரொக்கதொகை ஏற்பதில் புதிய சலுகையை மத்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.