நாடுமுழுவதும் 180 மாவட்டங்களில் கடந்த ஏழு நாட்களாக ஒருவருக்கு கூட புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களை பாடாய்படுத்தி வருகிறது, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். பல்வேறு நகரங்களில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசித் தட்டுப்பாடு, மருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. பல்வேறு மாநிங்களி்ல் விரைவாக அதிகரித்து வரும் கரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,01,078 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,18,92,676ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து இருந்த தினசரி கரோனா தொற்று இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து 1,79,30,960பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,18,609பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 37,23,446 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,38,270 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது.
இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதேசமயம் நாடுமுழுவதும் கரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த 21 நாட்களாக 54 மாவட்டங்களில் வைரஸ் தாக்கம் ஒருவருக்கு கூட இல்லை. நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 180 மாவட்டங்களில் கடந்த ஏழு நாட்களாக ஒருவருக்கு கூட புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.