கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, ‘கோ-வின்’ இணையதளத்தில் முன்பதிவு செய்ய 4 இலக்க பாதுகாப்பு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு கோ-வின் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதில் பதிவு செய்தவர்களுக்கு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரம் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த நாளில் சம்பந்தப்பட்டவர்கள், குறிப்பிட்ட மையத்துக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நாள், நேரம் போன்ற தகவல் அனுப்பியும் பலர் மையத்துக்கு வராமல் போகின்றனர். அப்படி வராமல் போனவர்களுக்கு, ‘தடுப்பூசி வழங்கப்பட்டது’ என்று தவறான தகவல் பெறுகின்றனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை நேற்று கூறியதாவது:
தடுப்பூசிக்காக முன்பதிவு செய்து, தகவல் பெற்றும் வராதவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இது தகவல்கள் சேகரிப்பு முறையில் ஏற்பட்டுள்ள குறைதான். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, தடுப்பூசிக்காக முன்பதிவு செய்பவர்களுக்கு 4 இலக்க பாதுகாப்பு ரகசிய எண் அறிமுகம் செய்யப்படுகிறது. cowin.gov.in என்ற இணையதளத்தில் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்யும் போது, 4 இலக்க ரகசிய எண் அனுப்பி வைக்கப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நாள், நேரம் போன்ற தகவல்களை பெற்றவர்கள், மையத்துக்கு செல்லும் போது அந்த 4 இலக்க எண்ணை தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிப்பவர்களுக்கு, தடுப்பூசி போட்டதற்காக வழங்கப்படும் மின்னணு சான்றிதழிலும் அந்த 4 இலக்க எண் இடம்பெறும்.
மேலும், மையத்தில் தடுப்பூசி போடுபவர்களுக்கு இந்த 4 இலக்க ரகசிய எண் தெரியாது. மையத்துக்கு சென்றால் அங்கிருப்பவர்கள் தடுப்பூசிபோடுவதற்கு முன்னர் பயனாளர்களிடம் 4 இலக்க எண்ணை கேட்பார்கள். அதை கூறிய பிறகு சரிபார்த்து தடுப்பூசி போடுவார்கள்.
இந்த பாதுகாப்பு முறை மூலம், தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தவறாக தகவல் வராது. இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
‘கோ-வின்’ என்பது ஆப் அல்ல இணையதளம். ஆரோக்கிய சேது ஆப் அல்லது கோ-வின் இணைய தளம் மூலம்தான் கரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.