தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கனமழை நீடித்தது. இந்த கனமழைக்கு பருவ நிலை மாறுபாடு காரணமா, இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்று திமுக எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று எழுத்துபூர்வமாக அளித்த விளக்கத்தில் கூறியிருப்ப தாவது:
இந்திய வானிலையின் இயற் கையான மாற்றங்கள் காரண மாகவே தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த 40 முதல் 50 ஆண்டு களில் நாட்டில் மழைப்பொழிவு அதிகரித்திருப்பதாக சில ஆய்வு முடிவுகளில் சுட்டிக் காட்டப்பட் டுள்ளது. ஆனால் இந்தியாவில் பெய்யும் கனமழைக்கும் சர்வதேச பருவநிலை மாற்றத்துக்கும் துளியும் தொடர்பில்லை.
தமிழகம், புதுச்சேரியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை பெய் கிறது. கடந்த நவம்பரில் 3 முக்கிய வானிலை மாற்றங்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது.
தமிழகத்தில் கனமழையின் எதிரொலியால் நீர்ப்பிடிப்பு பகுதி, நீர்நிலைகளில் வெள்ளம் புகுந்தது. இந்தப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்கள் குறித்து உள்ளூர் அதிகாரிகள்தான் ஆய்வு செய்ய வேண்டும்.
உள்ளூர் அதிகாரிகள் அவசர கால நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு ஏதுவாக கனமழை தொடர்பாக 3 நாட்களுக்கு முன்பே முன்னெச்சரிக்கை வெளி யிடப்பட்டது.
வெள்ள பாதிப்பு அபாயம் நிறைந்த நகரங்கள், தொழிற்பகுதி கள், கடலோர, நதியோர மாவட்டங்களில் நகர வடிவமைப்பு, கழிவுநீர் வெளியேற்றம், மழைநீர் வடிகால் ஆகியவற்றில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. சில இடங்களில் ஆக்கிரமிப்புகளும் முக்கிய பிரச்சினையாக உள்ளன.
சென்னையில் பெய்த கனமழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது ஆகியவற்றால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டு வெள்ளப் பாதிப்புகள் நேரிட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.