கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் உயிருக்குப் போராடிய கரோனா நோயாளியை பிபிஇ ஆடை அணிந்த இருவர் பைக்கில் அமரவைத்து உயர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. அதிகமான வைரஸ் பரவல் உள்ள 30 மாவட்டங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் கேரளாவின் ஆலப்புழா, கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன. கேரளாவில் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேல் புதிதாகத் தொற்றால் பாதிக்கப்படுவதால், நாளை முதல் 16-ம் தேதிவரை முழு ஊரடங்கை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆலப்புழா மாவட்டம், புன்னப்பாரா கிராமத்தில் ஒரு பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு திடீரென இன்று காலை சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு உயிருக்குப் போராடினார்.
ஆம்புலன்ஸுக்குப் பல முறை தொலைபேசியில் அழைத்தும் வரவில்லை. இதையடுத்து, பிபிஇ ஆடை அணிந்த இரு இளைஞர்கள், உயிருக்குப் போராடிய அந்த நோயாளிகளை பைக்கில் அமரவைத்து மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிபிஇ ஆடை அணிந்த இரு இளைஞர்கள், கரோனா நோயாளியை பைக்கில் அழைத்துச் சென்ற காட்சி அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகி வைரலானது.
புன்னப்பாரா கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளி விஷ்ணு கூறுகையில், “இன்று காலை 9 மணி அளவில் அந்த கரோனா நோயாளிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிருக்குப் போராடினார். ஆம்புலன்ஸுக்கு அழைத்தும் வரவில்லை. இதையடுத்து, பிபிஇ ஆடை அணிந்த இரு இளைஞர்கள் புன்னப்பாரா கூட்டுறவு மருத்துவமனைக்கு அந்த கரோனா நோயாளியை பைக்கில் அமரவைத்து அழைத்துச் சென்றனர்” எனத் தெரிவித்தார்.
இரு இளைஞர்களும் அந்த கரோனா நோயாளியை முதலில் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு ஆக்சிஜன் வசதி இல்லை என்று தெரிந்தவுடன், ஆலப்புழா மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர், மாவட்ட மருத்துவ அதிகாரி அனிதா குமாரியை விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட சுகாதார அதிகாரி அனிதா குமாரி கூறுகையில், “புன்னப்பாரா கோவிட் சிகிச்சை மையத்தை கிராமப் பஞ்சாயத்து நடத்துகிறது. பஞ்சாயத்து கால் சென்டரிலிருந்தும், கோவிட் உதவி மையத்திலிருந்தும் மாவட்ட மையத்துக்கு எந்த அழைப்பும் வரவில்லை.
கரோனா நோயாளி நிலைமை மோசமானதால், புன்னப்பாரா கரோனா மையத்தில் இருந்தவர்கள் பதற்றமடைந்து, பைக்கில் அமரவைத்து கரோனா நோயாளியை சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், மாவட்ட சுகாதார மையத்துக்கு தகவல் தெரிவிக்காமல் கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.