தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெற்றது. இதில், திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் 8 பேர் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மை பெற்ற ஸ்டாலின், ஆட்சி அமைக்க உரிமை கோரியதன் அடிப்படையில், இன்று (மே 07) காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்ட 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆளுநரின் தேநீர் விருந்திலும் முதல்வர் கலந்துகொண்டார். முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில் ‘‘புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரங்கசாமியின் பணி சிறக்க வாழ்த்துகள்’’ எனக் கூறியுள்ளார்.
முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள். தேசத்தை மேம்படுத்துவதற்கும், பிராந்திய நலன்களை நிறைவேற்றுவதற்கும், கோவிட் - 19 தொற்றுநோயை ஒழிப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.’’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.