நாட்டில் கரோனா வைரஸ் பரவல் சூழல் மோசத்திலிருந்து படுமோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. ஆனால், பிரதமர் மோடியும், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும் பொறுப்பேற்க மறுக்கிறார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களைப் பாடாய்ப்படுத்தி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்,
3,900க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். கரோனாவுக்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 36 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்திய அரசைச் சாடி கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதில், “நாட்டில் கரோனா வைரஸ் பெருந்தொற்றின் சூழல் மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. தடுப்பூசிகள் போதுமான அளவில் இல்லை என்பது கசப்பான உண்மை. ஆனால், மத்திய அரசு அதை மறுக்கிறது.
தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுக்கவில்லை. சிறிய அளவிலான மக்கள் மட்டுமே 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களில் யாரும் தடுப்பூசி செலுத்தவில்லை. இந்தச் சூழல் மற்ற மாநிலங்களிலும் பெரிய அளவில் வேறுபடவில்லை.
பிரதமர் மோடியும், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும் இதற்குப் பொறுப்பேற்க மறுக்கிறார்கள். இருவரும் ஜனநாயகத்தின் கொள்கைகளை கேலிக்கூத்தாக்குகிறார்கள்”.
இ்வ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.