மத்திய விஸ்டா திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களின் நலன் மீது அக்கறையும், முக்கியத்துவமும் செலுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
புதிய நாடாளுமன்றம் கட்டுதல், பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் உள்ளிட்டோருக்கு இல்லம் என மத்திய அரசு மத்திய விஸ்டா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தொடக்கத்தில் ரூ.11,794 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் அதன்பின் ரூ.13,450 கோடியாக உயர்த்தப்பட்டது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் மத்திய விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு தன்னுடைய விஸ்டா திட்டத்தை ஒதுக்கி வைத்து மக்களின் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும், மருத்துவக் கட்டமைப்புகளை அதிகமாக உருவாக்கி மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும். மத்திய விஸ்டா திட்டத்தை அத்தியாவசிய சேவையோடு சேர்த்துள்ளது தவறானது எனத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மத்திய விஸ்டா திட்டம் கிரிமினல் விரயம். மக்களின் உயிருக்கும், வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளியுங்கள். புதிய வீட்டைப் பெறுவதற்காக உங்கள் கண்மூடித்தனமான அகங்காரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பதிவிட்டுள்ள மற்றொரு ட்விட்டில், “ ஒட்டுமொத்த ஊரடங்கிற்கு நான் எதிரானவன். கடந்த ஆண்டு திட்டமிடப்படாத லாக்டவுன் கொண்டு வரப்பட்டு மக்கள் மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது, அதனால்தான் முழுமையான ஊரடங்கிற்கு நான் எதிராக இருக்கிறேன்.
ஆனால், பிரதமரின் தோல்வி, எந்த திட்டமும் இல்லாத மத்திய அரசின் ஒருபகுதி ஆகியவற்றால் தேசத்தை முழு ஊரடங்கிற்குள் தள்ளுகிறது. இதுபோன்ற நேரத்தில்,ஏழை மக்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்து, நிதித்தொகுப்பையும் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டர் கருத்தில், “ தேர்தல்கள் முடிந்துவிட்டன, மீண்டும் கொள்ளையடித்தல் தொடங்கிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.