இந்தியா

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் புகார் விவகாரம்: குற்றச்சாட்டை வாபஸ் பெறாவிட்டால் வழக்கு - ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு மிரட்டல்

பிடிஐ

தங்கள் நிறுவனம் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெறாவிட்டால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக ‘21-ம் நூற்றாண்டு மீடியா (டிசிஎம்)’ மிரட்டல் விடுத்துள்ளது.

ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் அஷுடோஷ் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கு இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லோகேஷ் சர்மா அனுப்பி உள்ள சட்ட நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான நீங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (டிடிசிஏ) ஊழல் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டினீர்கள். இதில் எங்கள் நிறுவனம் மீதும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மீதும் சில குற்றச்சாட்டுகளை கூறி உள்ளீர்கள்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்

குறிப்பாக, எங்கள் நிறுவனத்துக்கு ரூ.5.4 கோடி கமிஷன் வழங்கப்பட்டதாகவும், இது அப்போது டிடிசிஏ தலைவராக இருந்த அருண் ஜேட்லிக்கு தெரியும் என்றும் கூறினீர்கள். இவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை, உண்மைக்கு புறம்பானவை மட்டுமல்லாமல் அவதூறான குற்றச்சாட்டுகள் ஆகும்.

இதற்காக நீங்கள் மன்னிப்பு கோருவதுடன், நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT