குஜராத் மாநிலத்தில் அரிய வகை மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 5 மாத குழந்தையைக் காப்பாற்ற ‘கிரவுட் பண்டிங்’ மூலம் ரூ.16 கோடியை ஒரு தம்பதியினர் திரட்டி உள்ளனர்.
குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டம், லுனாவடா டவுனுக்கு அருகில் உள்ளது கனேசர் கிராமம். இங்கு வசிப்பவர் ராஜ்தீப் சிங் ரத்தோட். தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி ஜினால்பா. இவர்களுக்கு தைரியராஜ் என்ற 5 மாத குழந்தை உள்ளது. இந்தக் குழந்தை முதுகெலும்பு தசைநார் சிதைவு என்ற அரிய குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த தசைநார் சிதைவு அரிதான மரபணு கோளாறாகும்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள், முதுகெலும்பு மற்றும் மூளை தண்டுவடம் ஆகியவற்றில் உள்ள நரம்பு செல்கள் இழப்பால் தங்களது உடல் தசைகளை கட்டுப்படுத்த முடியாது. மேலும், மூச்சுத் திணறலும் ஏற்படும். கை, கால்களை அசைக்க முடியாது. இதற்கு மரபணு தெரபி மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
ஆனால், இந்த அரிய வகை மரபணு கோளாறுக்கு உலகிலேயே மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான ‘நோவார்டிஸ்’டிடம் ஊசி உள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள இந்நிறுவன ஊசியின் விலை மிகவும் அதிகம். எனினும், குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ரத்தோட் மற்றும் அவரது மனைவி ஜினால்பா இருவரும் துடித்தனர். அதற்காக நிதி திரட்ட தொடங்கினர்.
இதுகுறித்து செய்தியாளர் களிடம் ரத்தோட் கூறியதாவது:
எனது 5 மாத மகனின் உயிரைக் காப்பாற்ற கடந்த மார்ச் மாதம் நிதி திரட்ட தொடங்கினோம். கிரவுட் பண்டிங் மூலம் குஜராத் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் நிதி உதவி செய்தனர். அதன் மூலம் 42 நாட்களில் ரூ.16 கோடி நிதி திரண்டது.
சுவிட்சர்லாந்தின் நோவார்டிஸ் ஊசி ஒரு முறை மட்டும் போடக்கூடியது. இதன் விலை இந்தியாவில் ரூ.16 கோடி. இந்த மருந்து வேண்டும் என்று முன்கூட்டியே பதிவு செய்தால்தான், நோவார்டிஸ் மருந்து உற்பத்தி நிறுவனம் அனுப்பி வைக்கும். அதை சுவிட்லாந்தில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான வரி மட்டும்ரூ.6.5 கோடி. ஆனால், குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மனிதாபிமான அடிப்படையில் வரியை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.
முதுகெலும்பு தசைநார் சிதைவு கோளாறுக்கு, நோவார்டிஸ் நிறுவனத்தின் ஊசியை செலுத்தி சிகிச்சை அளிப்பது ஒன்றுதான் ஒரே வழி. இந்த சிகிச்சைக்கான ‘ஸோல்ஜென்ஸ்மா’ ஊசிதான் உலகிலேயே மிக அதிக விலை கொண்டது.
நல்ல உள்ளங்களின் நிதியுதவியால் எங்களது மகனுக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரபணு தெரபிக்கான விலை உயர்ந்த ஊசி 2 நாட்களுக்கு முன்னர் போடப் பட்டது. இனிமேல் என் மகன் மற்றவர்களை போல சாதாரணமாக ஓடி ஆடிவிளையாடுவான் என்று நம்புகிறேன். எனது மகனின் உயிரைகாப்பாற்ற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ரத்தோட் கூறினார்.