பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் | கோப்புப் படம். 
இந்தியா

பிஹாரில் 11 நாட்கள் ஊரடங்கு: உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவு

பிடிஐ

பிஹார் அரசு லாக்டவுனை அறிவிக்கிறதா அல்லது நாங்கள் உத்தரவிடட்டுமா என்று பாட்னா உயர் நீதிமன்றம் காட்டமான வார்த்தைகளைத் தெரிவித்ததை அடுத்து, மாநிலத்தில் வரும் 15-ம் தேதிவரை லாக்டவுனை அறிவித்து முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், பிஹார் மாநிலத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும், லாக்டவுனும் இல்லை. பிஹாரில் லாக்டவுன் கொண்டுவரக் கோரியும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தக் கோரியும் பல பொதுநல மனுக்கள் பாட்னா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதி சக்ரராதி சரண் சிங், மோகித் குமார் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இந்நிலையில், பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்த மருத்துமனையில் 200 படுக்கைகள், 60 ஐசியு படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன. அதிகமான கரோனா நோயாளிகளை அனுமதிக்க முடியாது. ஆக்சிஜன் சப்ளை பற்றாக்குறையும் இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

மேலும், பிஹார் மாநில இந்திய மருத்துவக் கூட்டமைப்பும் உடனடியாக 14 நாட்கள் லாக்டவுனை அறிவிக்க வேண்டும் என முதல்வர் நிதிஷ் குமாரை வலியுறுத்தி இருந்தனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஊரடங்கை அமல்படுத்தினால்தான் கரோனா பரவல் சங்கிலி உடையும் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சக்ரராதி சரண் சிங், மோகித் குமார் ஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காட்டமான வார்த்தைகளை அரசை நோக்கிப் பயன்படுத்தினர்.

நீதிபதிகள் மாநிலத் தலைமை வழக்கறிஞரிடம் கூறுகையில், “மாநிலம் முழுவதும் முழுமையான லாக்டவுன் கொண்டுவர வேண்டும் என்பதை முதல்வரிடம் தெரிவியுங்கள். மாநில அரசு லாக்டவுனை அறிவிக்காவிட்டால், நீதிமன்றம் தலையிட்டு அதற்குரிய உத்தரவுகளை வழங்கும். இதை இன்றே முதல்வரிடம் தெரிவித்து முடிவு எடுக்கக் கூறுங்கள்.

கரோனா வைரஸைச் சமாளிக்க முழுமையான திட்டத்தைத் தயாரியுங்கள் எனக் கடந்த மாதம் 15-ம் தேதி முதல் கூறி வருகிறோம். ஆனால், இதுவரை வெளியிடவில்லை. எந்தவிதமான செயல் திட்டமும் உங்களிடம் இல்லை. நீங்கள் எடுத்த நடவடிக்கையும், தாக்கல் செய்த அறிக்கையும் வெறும் கண்துடைப்புதான்” எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, முதல்வர் நிதிஷ் குமார், நேற்று இரவு திடீரென மாநிலம் முழுவதும் இன்று முதல் 11 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.

மக்களுக்கு எந்தவிதமான முன் அறிவிப்பும் செய்யாமல் திடீரென அறிவித்ததால், இன்று காலை முதல் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். காலை 7 மணி முதல் 11 மணி வரை மளிகைக் கடைகள்,காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடை உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன்பின் அனைத்துக் கடைகளையும் அடைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

லாக்டவுன் குறித்து அறியாமல் நண்பகலுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மறித்து போலீஸார் அபராதம் விதித்தனர். மேலும், கடைகளை மூடாமல் திறந்திருந்த வர்த்தககர்களிடம் எச்சரித்துக் கடைகளை மூடுமாறு கூறினர்.

SCROLL FOR NEXT