இந்தியாவில் கரோனா வைரஸ் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. இருப்பினும் நாம் அதற்குத் தயாராக வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். கரோனா 2-வது அலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமான ஆக்சிஜன், தடுப்பூசிகள், மருந்துகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறாரகள்.
இந்தச் சூழலில் 3-வது அலைக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் கே.விஜய் ராகவன் இன்று ஊடகங்களுக்கு டெல்லயில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் 2-வது அலையை எதிர்த்துப் போராடி வருகிறோம். ஆனால், மூன்றாவது அலை வருவதை நாம் தவிர்க்கமுடியாது. அதிகமான அளவில் வைரஸ் பரவல் இருப்பதால், எப்போது 3-வது அலை வரும் என்பதை நாம் தெளிவாகக் கூற முடியாது. இருப்பினும் நாம் புதிய 3-வது அலைக்குத் தயாராக இருக்க வேண்டும்.
கரோனா வைரஸின் மூல வைரஸ் எவ்வாறு பரவியதோ அதே அடிப்படையில்தான் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்களும் பரவுகின்றன. ஒரு மனிதரை பாதித்து அதன் மூலம் தன்னைப் பெருக்கிக் கொண்டு அடுத்தடுத்து பரவுகின்றன. முதலில் உருவான கரோனை வைரஸைவிட, உருமாற்றம் அடைந்த வைரஸ்கள், மக்களுக்கு அதிகமான அளவில் பரவக்கூடியதாக இருக்கிறது.
தற்போதுள்ள உருமாற்றம் அடைந்த வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் உலகம் முழுவதும் உருவாகலாம். இந்தியாவிலும் உருவாகலாம். உருமாற்றம் அடைந்த வைரஸ்களால் பரவலும் அதிகரிக்கும்''.
இவ்வாறு விஜய் ராகவன் தெரிவித்தார்.