கோப்புப்படம் 
இந்தியா

மராத்தியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பிடிஐ

மகாராஷ்டிராவில் மராத்திய மக்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. இட ஒதுக்கீட்டின் அளவை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்த எந்தவிதமான அசாதாரண சூழலும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்தது.

மகாராஷ்டிராவில் உள்ள மராத்திய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி 2019ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்துக்கும் அதிகமாகச் சென்று 66 சதவீதத்தைஎட்டும். ஆனால்,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு செல்லக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதில் தமிழகம் மட்டும் விதிவிலக்காக இருக்கிறது.

மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த மும்பை உயர் நீதிமன்றம், வேலைவாய்ப்பில் 12 சதவீதம், கல்வியில் 13 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு செல்லக்கூடாது என்று கூறிச் சட்டத்தை உறுதி செய்தது.

மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், மராத்தா இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி உத்தரவிட்டது.

அதில், "மராத்தியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைத்தது. அதேசமயம், இந்தச் சட்டத்தால் ஏற்கெனவே பயன்பெற்றவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இருக்கக்கூடாது" எனத் தெரிவித்து, கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரைத்தது.

இதையடுத்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த அரசியல் சாசன அமர்வில், நீதிபதி அசோக் பூஷன், நீதிபதிகள் எல்.என்.ராவ், ஹேமந்த் குப்தா, ரவிந்திர பாட், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. 5 நீதிபதிகளும் 4 தீர்ப்புகளை வழங்கினர்.

இதில் 5 நீதிபதிகளும் ஒரே மாதிரியாக அளித்த தீர்ப்பில், “ மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய ஜெ.கெய்க்வாட் ஆணையத்தின் அறிக்கையை ரத்து செய்தனர். மராத்தியர்களுக்கு தனியார இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14க்கு எதிரானது. அதுமட்டுமல்லாமல் 1992-ம் ஆண்டு இந்திரா சாஹ்னே தீர்ப்பான 50 சதவீதத்துக்கு அதிகமான இட ஒதுக்கீட்டை அசாதாரண சூழலில் பரிசீலிக்கலாம் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்டனர்” எனத் தெரிவித்தனர்.

நீதிபதி அசோக் பூஷன் கூறுகையில், “இந்திரா சாஹ்னே தீர்ப்பை (மண்டல் தீர்ப்பு) மறு ஆய்வு செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதைக் கூடுதல் அமர்வுக்குப் பரிந்துரைக்கவும் அவசியமில்லை. இந்திரா சாஹ்னே தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது போன்று, மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க அசாதாரண சூழல் ஏதும் இல்லை. அதற்கான காரணத்தையும் கெய்க்வாட் ஆணையம் குறிப்பிடவில்லை. இந்திரா சாஹ்னே தீர்ப்பை இதுவரை 4 அரசியல் சாசன அமர்வு உறுதி செய்துள்ளதால் அதை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

நீதிபதிகள் எல்.என்.ராவ், ஹேமந்த் குப்தா, ரவிந்திர பாட் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், “அரசியலமைப்புச் சட்டத்தின் 102-வது திருத்தச் சட்டத்தில், சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் மாற்றங்கள் செய்ய குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. மத்திய அரசின் பரிந்துரையில், புள்ளிவிவரங்கள் அடிப்படையில், தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையில் குடியரசுத் தலைவர் மாற்றலாம். மாநிலங்கள் ஆலோசனைகள் மட்டுமே அளிக்க முடியும், மாநில அரசுகள் திருத்தி அமைக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.

ஆனால், நீதிபதி பூஷன், அப்துல் நசீர் இந்தத் தீர்ப்பில் இருந்து மாறுபட்டனர். அவர்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் மாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் அதிகாரம் உண்டு எனத் தெரிவித்தனர்.

மேலும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோர் குறித்த புதிய பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும். அதுவரை ஏற்கெனவே இருக்கின்ற பட்டியல் நடைமுறையில் இருக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேசமயம், மராத்தா இட ஒதுக்கீடு சட்டத்தால் பயனடைந்து கல்வி பயிலும் மாணவர்கள், வேலைவாய்ப்பு பெற்றோருக்கு எந்தவிதமான இடையூறும் இருக்கக் கூடாது. மாணவர்கள் ஏற்கெனவே மராத்தா இட ஒதுக்கீட்டில் இடம்பெற்றிருந்தாலும் அவர்களையும் தொந்தரவு செய்யக்கூடாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

SCROLL FOR NEXT