பல விலைகளோடு கூடிய புதிய தடுப்பூசிக் கொள்கை சமூகத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும். மக்களின் பொது சுகாதாரத்துக்கே தீங்கு விளைவிக்கும் முகாந்திரம் இருப்பதால், புதிய தடுப்பூசிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கரோனா 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மூச்சுத் திணறலால் அவதிப்படுவோருக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
இந்நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து 6 உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பாட் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று இரவு நீதிபதிகள் அமர்வு பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பிறப்பித்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''தடுப்பூசி மருந்து விற்பனையாளர்கள் இரு வேறுபட்ட விலையை வெளியிட்டுள்ளனர். குறைந்த விலைக்கு வழங்கப்படும் தடுப்பூசி மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும், தனியாருக்கும் அதிகமான விலையிலும் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
போட்டியை ஊக்குவிக்கும் அடிப்படையில் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநிலங்களை நாங்கள் வற்புறுத்தினால், 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களுக்கு மாநில அரசுகளால் செலுத்தப்படும் தடுப்பூசிப் பணி பாதிக்கலாம்.
இந்த 18 முதல் 44 வயதுள்ள பிரிவினரில் சாமானிய மக்கள், விளிம்பு நிலையில் உள்ள மக்கள், ஏழைகள் எனப் பல பிரிவினரும் உள்ளார்கள். அவர்களால் பணம் செலுத்தி இந்தத் தடுப்பூசியை வாங்க இயலாது.
மக்களுக்குத் தடுப்பூசி அத்தியாவசியமானதா அல்லது இல்லையா என்பது குறித்த முடிவை ஒவ்வொரு மாநில அரசும், அதன் நிதிச்சூழலுக்கு ஏற்ப எடுக்கிறது. அதேபோல தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டுமா அல்லது மானியத்தில் வழங்கப்படுமா என்பதையும் மாநில அரசுகள்தான் தீர்மானிக்கும். ஆனால், நிச்சயம் பல விலைகளில் இருப்பது தேசத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும். பொது நன்மை கருதி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்
ஒரே தளத்தில், ஒரே சூழலில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு இடையே மத்திய அரசு வேறுபாடு காட்ட முடியாது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் மத்திய அரசு இலவசமாகத் தடுப்பூசி வழங்கும், அதற்கான சுமையை ஏற்கும். மாநில அரசுகள் 18 முதல் 44 வயதுடைய மக்களுக்கான சுமையைத் தாங்க வேண்டும் எனப் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21ன்படி, மக்களுக்கான வாழ்வாதார உரிமைக்காக மத்திய அரசு, தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேசி அனைத்துத் தடுப்பூசிகளையும் கொள்முதல் செய்யலாம். ஒவ்வொரு மாநிலத்துக்கான அளவை நிர்ணயம் செய்து அதைப் பிரித்து வழங்கி, பின்னர் தேவைப்பட்டால் அளவை உயர்த்தலாம்.
தற்போதுள்ள தடுப்பூசிக் கொள்கை மீது எந்தவிதமான உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்கவில்லை. ஆனால், தற்போதுள்ள தடுப்பூசிக் கொள்கை, அரசியலமைப்பின் 21-ம் பகுதியாக இருக்கும் மக்களின் பொது சுகாதாரத்துக்குத் தீங்கு விளைவிப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது.
ஆதலால், தற்போதுள்ள தடுப்பூசிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். அரசியலமைப்பின் பிரிவு 14 (சமத்துவ உரிமை), பிரிவு 21 (தனி சுதந்திரம், வாழ்வாதாரப் பாதுகாப்பு) ஆகியவற்றை உறுதி செய்யும் என நம்புகிறோம்''.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.