இந்தியா

நில ஆக்கிரமிப்பு புகார் எதிரொலி: தெலங்கானா சுகாதார அமைச்சர் பதவி நீக்கம்

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் உள்ள அச்சம்பேட்டை, ஹக்கீம்பேட்டை கிராமங்களில் நலிந்த விவசாயிகள், கள் இறக்கும் தொழிலாளர்கள் மற்றும் தலித்துகளுக்கு கடந்த 1994-ல் அப்போதைய அரசு சுமார் 120 ஏக்கர் நிலம் வழங்கியது.

இந்த நிலங்களை மாநில சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் ஈடல ராஜேந்தரின் குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் முதல்வர் கே. சந்திரசேகர ராவுக்கு கடிதம் எழுதினர்.

இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினர் தங்கள் அறிக்கையை முதல்வரிடம் நேற்று காலை வழங்கினர். புகாரில் கூறியவை உண்மை என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அமைச்சர் ஈடல ராஜேந்தரை பதவி நீக்கம் செய்ய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதல்வர் கே.சந்திரசேகராவ் பரிந்துரை செய்தார். இதனை ஆளுநர் தமிழிசை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து ஈடல ராஜேந்தர் தனது அமைச்சர் பதவியை இழந்தார்.

          
SCROLL FOR NEXT