இந்தியா

பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.8,873 கோடி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதிக்கான முதல் தவணை ஜூன் மாதத்தில் ஒதுக்குவது வழக்கம். தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு முன்கூட்டியே ஒதுக்கி உள்ளது.

இதை கருத்தில் கொண்டு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ.8,873.6 கோடி விடு விக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கியுள்ள பேரிடர் நிவாரண நிதியில் 50 சதவீதத்தை, அதாவது ரூ.4,436.8 கோடியை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி, சேமிப்பு மையங்கள், செயற்கை சுவாசக் கருவிகள், காற்றை தூய்மைபடுத்தும் கருவிகள், உடல் வெப்பநிலை சோதனை கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகளை வாங்குவது, ஆம்புலன்ஸ் சேவைகளை மேம்படுத்துவது, கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பது போன்ற கரோனா தடுப்புநடவடிக்கைகளுக்கு நிவாரண நிதியை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT