இந்தியா

தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது; எப்படியாவது ஆக்சிஜன் கொடுங்கள்: மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

"தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. இனியும் பொறுக்க முடியாது. டெல்லி மருத்துவமனைகளுக்கு இன்றைக்குள் எப்படியாவது தேவையான ஆக்சிஜன் கொடுங்கள்" என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா 2வது அலை பரவலில் மருத்துவ அக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக தாக்கலான பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், "தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. இப்போது நீங்கள்தான் எல்லாவற்றையும் தயார் செய்ய வேண்டும். 8 உயிர்கள் பலியாகியுள்ளன.

இதையெல்லாம் கேட்காமல் காதுகளை மூடிக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் தான் டெல்லிக்கு அன்றாடம் 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்படும் என உறுதி அளித்தீர்கள்.

அதைக் காப்பாற்ற வேண்டியது உங்களின் பொறுப்பு.

நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கிடைக்க உடனே நடவடிக்கை எடுங்கள்.

ஆக்சிஜனை கொண்டுவருவதற்கான டேங்கர்களையும் மத்திய அரசு தான் ஏற்பாடு செய்ய வேண்டும். இதை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயங்கமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இன்று டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஒரு மருத்துவர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதனை சுட்டிக்காட்டியே டெல்லி உயர் நீதிமன்றம் மிகக் கடுமையாக மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

SCROLL FOR NEXT