கார் விபத்து தொடர்பான வழக்குக்காக சல்மான் கான் ரூ.25 கோடிக்கும் அதிகமாக செலவு செய்ததாக அவரது தந்தை சலீம் கான் தெரிவித்துள்ளார்.
போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், சல்மான் கான் ரூ.25 கோடிக்கும் அதிகமாக செலவு செய்ததாக அவரின் தந்தையும் திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "இந்த வழக்கிலிருந்து சல்மான் கானை விடுவித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது மகிழ்ச்சி அடையச் செய்தது. தீர்ப்பைக் கேட்டு நாங்கள் அனைவருமே மகிழ்ச்சியடைந்தோம். சல்மானுக்கு நெருக்கமான ஒவ்வொருவரும் நிம்மதியுடனும் சந்தோஷமாகவும் உள்ளனர்.
சல்மானுக்கு ஏற்பட்ட கடுமையான சோதனை குறித்து மக்களுக்குத் தெரியவில்லை. அவர் எளிதில் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டனர் என மக்கள் பேசுகின்றனர். அவர் சில நாட்கள் சிறையில் இருந்தார். மனஉளைச்சலுக்கு ஆளானார். வழக்குக்காக ரூ.20 முதல் 25 கோடி வரை செலவு செய்துள்ளார். இதுதவிர, அவரும் அவரைச் சுற்றியிருப்பவர்களும் இவ்வளவு நாட்கள் எவ்வளவு பதற்றத்துடனும் துயரத்துடனும் காத்திருந்தோம் என்று மற்றவர்களுக்கு தெரியுமா? " என தெரிவித்துள்ளார்.