இந்தியா

சென்னைக்கு மருத்துவக் குழு அனுப்புகிறது திருப்பதி தேவஸ்தானம்

செய்திப்பிரிவு

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு 5 மருத்துவ குழுக்களை அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடப்பாவில் உள்ள ஒண்டி மிட்டா கோதண்ட ராமர் கோயில் மராமத்து பணிகளுக்கு ரூ. 20 கோடி, தேவுண்ணி கடப்பா பகுதியில் திருமண மண்டபம் கட்ட ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள கோதண்ட ராமர் சத்திரத்துக்கு ரூ. 3.92 கோடியும், கோவிந்தராஜ சுவாமி சத்திரத்திற்கு ரூ. 3.67 கோடியும் மராமத்து பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது.

அன்னபிரசாத திட்டத்துக்கு ரூ. 5.89 கோடிக்கு 15.30 லட்சம் கிலோ உயர் ரக அரிசி, ரூ. 1.95 கோடிக்கு 22 லட்சம் தேங்காய், ரூ. 5.08 கோடிக்கு எண்ணெய், உற்சவரான மலையப்ப சுவாமிக்கு ரூ. 1.06 கோடி செலவில் 1,150 பட்டு சேலைகள் வாங்கவும் தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது.

மேலும் பிரம்மோற்சவ விழாவில் பணியாற்றும் தேவஸ்தான நிரந்தர ஊழியர்களுக்கு ரூ. 12,200, தற்காலிக ஊழியர்களுக்கு ரூ. 6,100 வழங்கவும் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு சதலவாடா கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.

கூட்டத்தில், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT