இந்தியா

திருப்பதி வனப்பகுதியில் செம்மர கடத்தல் கும்பல் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு: தமிழக தொழிலாளர்கள் 5 பேர் கைது

செய்திப்பிரிவு

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் நேற்று அதிகாலை செம்மர கடத்தல் கும்பல் மீது ஆந்திர போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி தமிழக தொழிலாளர்கள் 5 பேரை கைது செய்தனர்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தாக தமிழக தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகி றது. என்றாலும் செம்மர கடத்தலை முற்றிலுமாக தடுக்க முடிய வில்லை. சித்தூர், திருப்பதி, நெல் லூர், கடப்பா, கர்னூல், போன்ற இடங்களில் தினந்தோறும் செம் மரங்கள் கடத்தப்பட்டு, தமிழகம், கர்நாடகம் வழியாக பிற மாநிலங் களுக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டு வருகிறது.

செம்மர கடத்தலை தடுக்க சேஷாசலம் வனப்பகுதியில் அதிரடி போலீஸார் மற்றும் வனத்துறையினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை சேஷாசலம் வனப்பகுதியில் பாகராபேட்டை அருகே உள்ள எர்ரகுட்டா பகுதியில் செம்மரம் கடத்துவதாக அதிரடி போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் ஆயுதம் தாங்கிய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தமிழக கூலித் தொழிலாளர்கள் செம்மரங்களை வெட்டி கடத்திக் கொண்டிருந்தனர். அவர்களை சரண் அடையும்படி போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இவர்களை எச்சரிக்க போலீஸார் 2 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அனைவரும் செம்மரங்களை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இவர்களில் 5 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். மேலும் 33 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

இத்தகவலை அதிரடிப்படை டிஐஜி காந்தாராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

SCROLL FOR NEXT